TVK: தமிழகத்தில் நடக்கும் தேர்தல் என்றாலே அரசியல் களம் மிகவும் பரபரப்பாக தான் இருக்கும். அதிலும் இந்த முறை பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்திருப்பதால் மிக அதிக வேகமெடுத்துள்ளது. இதற்கு முழுமுதற் காரணமாக பார்க்கப்படுவது விஜய்யின் அரசியல் வருகை தான். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. தவெக இரண்டு மாபெரும் மாநாடுகள் மற்றும் 5 பிரச்சாரங்களை நடத்தி முடித்த நிலையில், ஆறாவதாக கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது, 41 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து சுமார் ஒன்றரை மாதங்களாக வெளியே வராமல் இருந்த விஜய், சிறப்பு பொதுக்குழு கூட்டத்தின் மூலம் வெளியே வந்தார். மேலும் ஒரு வாரத்திற்கு முன்பு புதுவையில் பொதுக்கூட்டம் நடத்தினார். இது மட்டுமல்லாமல், நேற்று ஈரோட்டில் தவெக பரப்புரை நடைபெற்றது. இவ்வாறு கரூர் சம்பவத்திற்கு பின் தனது அரசியல் பணியை தீவிரப்படுத்தியுள்ள தவெக அடுத்ததாக சேலத்தில் மக்கள் சந்திப்பை நடத்த திட்டமிட்டுள்ளது.
புதுவையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு முன்பே சேலத்தில் அனுமதி கேட்ட போது, பல்வேறு காரணங்களால் அது மறுக்கப்பட்டது. இதனால் கொங்கு மண்டலமான ஈரோட்டில் பிரம்மாண்டமாக பிரச்சாரம் நடத்தி முடிக்கப்பட்ட கையுடன் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்திலும் கால் பாதிக்க தவெக முயற்சிக்கிறது. இதற்காக சேலத்தின் முக்கிய பகுதிகளில் தவெக அனுமதி கேட்டுள்ளது. சேலத்தில் நடைபெறும் இந்த மக்கள் சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.