TVK: 2026 யில் நடைபெற போகும் தேர்தலில் விஜய்யின் தவெக போட்டியிட போவதாக அறிவித்ததிலிருந்தே இது அரசியல் களத்தில் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆளுங்கட்சியான திமுகவை அரசியல் எதிரி என்று கூறியதால் இந்த தேர்தலில் விஜய்யின் தாக்கம் அதிகளவில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. விஜய்யை தங்கள் கட்சியில் சேர்க்க பலரும் முயற்சித்து வரும் சமயத்தில் தவெக தலைமையில் தான் கூட்டணி. நான் தான் முதல்வர் வேட்பாளர் என்று விஜய் திட்டவட்டமாக கூறி வருகிறார். அதிமுக, திமுக போலில்லாமல் விஜய் கட்சி மிகவும் நல்லிணக்கத்துடன் இருக்கிறது என நினைத்த பொழுது தான் அதனை முறியடிக்கும் வகையில் அமைந்தது கரூர் பிரச்சாரம்.
இந்த சம்பவத்திற்கு பின் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கட்சியை நிலைநிறுத்த முயலாமல் ஓடி ஒளிந்து கொண்டனர். அத்துடன், ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்தி தப்பிக்க பார்த்தனர். அப்போதிலிருந்தே தவெகவிலும் உட்கட்சி பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. மேலும் கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கும், ஆதவ் ஆர்ஜூனாக்கும் சில கருத்து வேறுபாடுகள் நிலவியதாகவும் தகவல் வெளிவந்தது. இப்படி இருக்கும் சூழலில் தற்போது புதிதாக சேர்ந்தவர்களுக்கும், ஏற்கனவே கட்சியில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கும் மோதல் போக்கு வெடித்துள்ளது.
செங்கோட்டையன் வருகையால் புஸ்ஸி ஆனந்த பின்னுக்கு தப்பட்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து திமுகவின் தலைமை கழக பேச்சாளராக இருந்த நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்த கையுடன் அவருக்கு பரப்புரை செயலாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. தவெகவில் ராஜ் மோகன், கழக கொள்கை பரப்பு செயலாளராக இருக்கும் நிலையில், அவருக்கு இணையாக புதிதாக வந்தவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் வெடிக்க வாய்ப்புள்ளது என்று பலர் கூறுகின்றனர். மேலும் புதிதாக வந்தவர்களை விஜய் முன்னிலைப்படுத்துவதால் அவர் மீது அதிருப்தி நிலவுவதற்கான சாத்திய கூறுகள் அதிகளவில் உள்ளன.

