TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் அதற்கான வேலைபாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிறிய கட்சிகள் தங்களுடைய நிலைப்பாட்டை தக்க வைத்து கொள்ள எந்த கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று ஆலோசித்து வரும் வேளையில், திராவிட கட்சிகளான அதிமுகவும், திமுகவும், பாமக, தேமுதிக, தவெக போன்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தையையும், தொகுதி பங்கீட்டையும் நடத்தி வருகிறது. இந்நிலையில், விஜய்யின் தவெக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது தற்போது வரை புரியாத புதிராகவே உள்ளது.
திமுக தவெகவின் அரசியல் எதிரி என்பதால் அதனுடன் கூட்டணி அமைக்காது என்பது தெரிந்த விஷயம். அதனால் அதிமுக உடன் கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார் விஜய். இதன் காரணமாக விஜய்யின் கூட்டணி யாருடன் என்ற கேள்வி தற்போது வரை அனைத்து ஊடகங்களிலும் காரசார விவாதமாக உள்ளது. இந்நிலையில், விஜய், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக, தவாக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு 80% வாய்ப்புகள் உள்ளது என தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜய்யிடம் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக விசிகவிற்கு திமுக உடன் தொகுதி பங்கீட்டில் உள்ள பிரச்சனையை பயன்படுத்தி கூட்டணிக்கு வர வைப்பதற்கான வேலைப்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது. மதிமுகவிடம் திமுகவின் கொள்கை அரசியலை மையப்படுத்திய பேச்சு நடத்தப்படுவதாக பலரும் கூறி வருகின்றனர். மற்றபடி காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தவாக போன்ற கட்சிகள் தானாக வந்துவிடுமென்ற எண்ணம் தவெகவிற்கு உள்ளது என தவெகவின் நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

