இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி டுவிட்டர் கணக்கில் புளு டிக் நீக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது. இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் ரசிகர் பட்டாளத்தை தனக்கென்று தனியாக உருவாக்கி வைத்திருப்பவர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி..அவர் தற்சமயம் பெரிய அளவில் கிரிக்கெட் போட்டிகள் எதிலும் பங்கேற்பது இல்லை என்றாலும் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற அப்டேட்டை ரசிகர்கள் இணையதளத்தில் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
உலகின் தலைசிறந்த கேப்டனாக விளங்கி வந்த மகேந்திரசிங் தோனி தான் கிரிக்கெட் உலகில் அறிமுகமானது முதல் ஓய்வு பெறும் வரையில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்தார். சென்ற சில வருடங்களுக்கு முன்னதாக போட்ட ட்வீட்டுகள் என்று ரசிகர்களால் நினைவு கூரப்பட்டு வருகிறது.ஏனென்றால் தோணி கேலி, கிண்டல் என சுவாரஸ்யமான விதத்தில் தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டார் தோனி.
இப்படி கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் அல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஆல்-ரவுண்டராக வலம்வந்த எம்எஸ் தோனி சென்ற ஒரு வருடத்திற்கு மேலாக எந்தவிதமான பதிவுகளையும் போடவில்லை என்று சொல்லப்படுகிறது. அவர் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்பொழுது வரையில் ஓரளவிற்கு சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்த அவர் ஓய்வை அறிவித்த பின்னர் சமூக வலைதளங்களில் இருந்து விலகி மிகவும் பிஸியாக குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
தோனி தற்சமயம் என்ன தான் செய்து கொண்டிருக்கிறார் என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளிக்குமாறு அவருடைய மனைவி சாக்ஷி தான் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் தெரிவிப்பார். சமீபத்தில் புது குதிரை வாங்கியதை கூட சாக்ஷி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.இந்த சூழ்நிலையில், நீண்ட தினங்களாக பயன்படுத்தப்படாமல் இருந்த தோனியின் ட்விட்டர் கணக்கில் புளுடிக் நீக்கப்பட்டு உள்ளது. பிரபலங்களின் பெயரில் பல போலி கணக்குகள் தொடங்க படுவதால் உறுதி செய்யப்பட்ட கணக்கு என்பதை குறிப்பிடுவதற்காக ப்ளூடிக் கொடுக்கப்படுகிறது. ஆனால் தற்சமயம் தோனியின் கணக்கிலிருந்து அந்த ப்ளூடிக்கை டுவிட்டர் நிறுவனம் நீக்கி இருக்கிறது.
மகேந்திர சிங் தோனியை 8.20 மில்லியன் பயனாளர்கள் ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்ந்து வருகிறார்கள். அவர் பதிவுகள் எதுவும் போடவில்லை என்றாலும் கூட அவருடைய பதிவுக்காக அவருடைய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். கடைசியாக கடந்த ஜனவரி மாதம் எட்டாம் தேதி அன்று பதிவிட்டு இருக்கிறார் அதன்பின்னர் அவர் பதிவு எதுவும் போடவில்லை. இந்த நிலையில், ப்ளூடிக்கை நீக்கி இருப்பதால் ட்விட்டர் நிறுவனத்தின் மீது அவருடைய ரசிகர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்.