DMK: தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக 2026 தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தன் வசப்படுத்தியே வைத்திருக்க வேண்டுமென்று முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதற்காக ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரச்சார பயணத்தையும் தொடங்கியுள்ளது. மேலும் அதிமுகவில் நிகழும் உட்கட்சி பிரச்சனைகளை போல திமுகவிலும் நிகழ கூடாது என்பதில் திமுக தலைமை கவனமாக இருக்கிறது.
ஆனால் கூட்டணி கட்சிகளோ அதற்கு எதிர் மாறாக நடந்து வருகின்றன. 1 வாரத்திற்கு முன்பு நடந்த சட்டசபை கூட்டத்தில் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன், இதை திரும்ப பெற வேண்டுமென்று கூறியிருந்தார். இதற்கு முன் ஒரு முறை விசிகவிற்கு, திமுக கூட்டணியில் இரண்டு சீட்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.
இவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.எஸ். அழகிரி, மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த போன்றோரும் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என கூறி ஸ்டாலினை வலியுறுத்தி வருகின்றனர். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இந்த இரண்டு கட்சியும் திமுகவை விட்டு விலகி தனித்தோ அல்லது வேறு கட்சியுடன் கூட்டணி வைத்தோ சட்டமன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது. இவர்களின் இந்த தொடர் வலியுறுத்தல், திமுக தலைமைக்கு எதிரான கோஷம் போன்றவை நடைபெற இருக்கும் தேர்தலில் திமுகவின் தோல்விக்கு வழிவகுக்கும் என்றும் அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

