DMDK TVK DMK: 2026 யில் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தேர்தல் களம் வேகமேடுத்துள்ளது. மேலும் கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆளுங்கட்சியான திமுக உடன், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக போன்ற கட்சிகள் அங்கம் வகித்து வரும் நிலையில், அதிமுக உடன் பாஜக, தமாகா மட்டுமே கூட்டணி அமைத்துள்ளது. நாதக வழக்கம் போல தனித்து போட்டியிடும் முடிவில் உள்ளது. புதிய கட்சியான தவெக மூன்றாம் நிலை கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், பாமக மற்றும் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு என்னவென்றே தெரியவில்லை.
பாமகவின் ஒரு பகுதி அதிமுக பக்கம் ஆதரவு தெரிவித்து வருவதை காண முடிகிறது. மற்றொரு பகுதி திமுக பக்கம் செல்லுமா இல்லை தவெக பக்கமா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் தேமுதிக மூன்று பக்கமும் கதவை திறந்து வைத்துள்ள சமயத்தில், ஜனவரி 9 ஆம் தேதி கூட்டணியை அறிவிப்பதாக பிரேமலதா கூறியிருந்தார். இவ்வாறான நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும் பிரேமலதா, தனது கூட்டணி குறித்து மறைமுகமாக கூறி வருகிறார். அந்த வகையில், இம்முறையும் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலையொட்டி பல்வேறு போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டுமென கூறினார்.
மேலும் இது வரை இல்லாத வகையில் ஒரு மாற்றம் நடந்து, தமிழக மக்களுக்கு நல்லது நடந்தால் நிச்சயம் அதனை நாங்கள் வரவேற்போம் என்றும், இதுவரை இல்லாத தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும், நிச்சயம் கூட்டணி அமைச்சரவை அமைவதற்கான வாய்ப்பும், மாற்றம் வருவதற்கான வாய்ப்பும் அதிகம் இருக்கிறது என்று தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று விஜய் கூறியதன் காரணமாகவும், ஆட்சி மாற்றம் நிகழும் என்று தவெக கூறி வருவதாலும் பிரேமலதா விஜய்யுடன் இணைவார் என்பது இவரது கருத்தின் மூலம் தெளிவாகியுள்ளது. மேலும், திமுக அரசுக்கு எதிராக இவர் பேசியிருப்பதால் திமுக உடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.