CA exam: பொங்கல் விடுமுறையில் ‘சி.ஏ’ தேர்வு விவகாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்.
வருகின்ற 2025 ஆண்டு பொங்கல் பண்டிகை விழா நாட்களில் ஜனவரி 14 மற்றும் 16 ஆம் தேதிகளில் ‘சி.ஏ’ தேர்வுக்கான அட்டவணைகள் வெளியானது. பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் முக்கியமான விழாவாகும். பொங்கல் பண்டிகை நாட்களில் சி.ஏ தேர்வு நடத்துவதற்கு தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வந்தார்கள்.
அந்த வகையில் தேர்வர்கள் சிரமமின்றி தேர்வு எழுத தேர்வு தேதி அட்டவணைகள் மாற்றி அமைக்க கடிதத்தின் மூலம் கோரிக்கை முன் வைத்தார் மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., வெங்கடேசன். இவர் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ஐ.சி.ஏ.ஐ., தலைவர் ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் கடிதம் எழுதி இருந்தார். மேலும் அறிக்கை வெளியிட்டார் அதில் பொங்கல் அன்று தேர்வுகள்; எத்தனை முறை சொன்னாலும் திருந்தப் போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதும் இல்லை. மத்திய அரசே தேர்வு தேதியை உடனே மாற்று.
தமிழ் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எதற்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜ.க மாநில செயலர் எஸ்.ஜி.சூர்யா சி.ஏ., தேர்வு தேதியை மத்திய அரசு முடிவு செய்வதில்லை, ஐ.சி.ஏ.ஐ., என்ற தன்னாட்சி அமைப்பு தான் நடத்துகிறது என சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். இவரின் பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருக்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
மேலும் அந்த பதிவில் ‘எதில பார்த்தாலும், எப்ப பார்த்தாலும், தமிழ் விரோதி பிரசாரம் சிலருக்கு பழக்கமாகி விட்டது’ என பதில் தெரிவித்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு அமுக TTV தினகரன் மற்றும் திமுக நிர்வாகி ராஜீவ் காந்தியும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.