மதுரையில் வரவிருக்கும் டைடல் பார்க். அடுத்த மாதம் நடக்கவிருக்கும் அடிக்கல் நாட்டு விழா. தமிழ்வளர்த்த தலைநகரில் புதிய ஐடி பூங்கா.
தமிழகத்தில் அமைந்துள்ள மதுரையில் டைடல் பார்க் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மண் எடுத்து பரிசோதனைக்கு கொடுக்கபட்டுள்ளது. மேலும் ஐடி பார்க் மாட்டுத்தாவணியில் அமைப்பதற்கான மாதிரி புகைப்படங்களை டாடா நிறுவனம் டைடல் பார்க் நிறுவனத்திற்கு ஒப்படைத்துள்ளது. ஐடி பார்க்கிற்கான கட்டுமானப் பணிகள் தொடங்க டெண்டர் இன்னும் சில நாட்களிலேயே வழங்கப்படுவதாக கூறப்பட்டது.
ஐந்து ஏக்கர் நிலப்பரப்பளவில் உருவாக்கப்படவுள்ள தகவல் தொழில் நுட்ப அலுவலகத்திற்காக மதுரை பகுதிக்குச் சொந்தமான நிலத்தினை டைடல் பார்க் நிறுவனம் குத்தகைக்கு பெறுவதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள், டைடல் பார்க் நிறுவனம் மற்றும் மதுரை மாநகராட்சியுடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பத்தாயிரம் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மதுரையை தொழிநுட்ப மையமாக மாற்றும் நோக்கத்தில் இந்த திட்டம் அரசால் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் மதுரையில் மாட்டுத்தாவணி பகுதியில் உருவாக்கப்படவுள்ள தகவல் தொழில்நுட்ப அலுவலகத்திற்கு அடுத்த மாதம் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் என்று கூறப்படுகிறது. 345 கோடி செலவில் உருவாக்கப்படவுள்ள இந்த டைடல் பார்க் 640000 சதுர அடியில் அமைக்கப்படும்.