ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருநாகேஸ்வரம்!

Photo of author

By Sakthi

மூலவர்– உப்பிலியப்பன் (திருவிண்ணாகரப்பன்)

உற்சவர்-பொன்னப்பன்

அம்மன்-பூமாதேவி

இந்த  திருக்கோவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த கோவிலில் பிரதான இறைவனான பெருமாள் உப்பிலியப்பன், திருவிண்ணகரப்பன், உள்ளிட்ட பெயர்களால் அழைக்கப்படுகிறார். தாயார் பூமாதேவி என்கின்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறார். திருநாகேஸ்வரம் என்றழைக்கப்படும் இந்த ஊர் முற்காலத்தில் திருவிண்ணகரம் என்றழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோவிலின் தீர்த்தம் அஹோத்ர புஷ்கரணி என்று அழைக்கப்படுகிறது வைணவர்களின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் இந்த கோவில் என சொல்லப்படுகிறது.

தல புராணங்களினடிப்படையில், திருமாலின் நெஞ்சில் எப்போதும் லட்சுமிதேவி இருப்பதைப்போல சிறப்பு தனக்கும் வேண்டுமென பூமாதேவி தன்னுடைய கணவரான திருமாலிடம் கேட்டபோது, பூலோகத்தில் மகரிஷி ஒருவருக்கு துளசி என்று பொருள்படும் திருத்துழாய் என்ற பெயரில் மகளாக வரும் போது தன்னுடைய இதயத்தில் இடம் பெறும் பெருமை தனக்கு கிட்டும் என திருமால் வரமளித்திருந்தார்.

மகாலட்சுமியே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டுமென தவமிருந்த மார்க்கண்டேய மகரிஷி துளசி வனத்தில் மகாலட்சுமியின் அம்சங்களுடன் குழந்தையாக கிடந்த பூமாதேவியை எடுத்துச் சென்று துளசி என்று பெயர் சூட்டி தன்னுடைய மகளாக வளர்க்க ஆரம்பித்தார்.

துளசி திருமணப் பருவத்தை அடைந்தவுடன் மகாவிஷ்ணுவாகிய பெருமாள் ஒரு அந்தணர் வேடத்தில் வந்து மார்க்கண்டேய மகரிஷியிடம் அவருடைய மகளான துளசியை மணமுடித்து கொடுக்குமாறு கேட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் மார்க்கண்டேயரோ இளம் வயதுப் பெண்ணான துளசிக்கு உணவில் சரியான பதத்தில் உப்பு சேர்த்து சமைக்கும் பழக்கம் கூட அறியாதவர் என்பதால் அவளை மணமுடித்துக் கொடுப்பது நன்றாக இருக்காது என தெரிவித்திருக்கிறார்.

ஆனால் துளசி செய்யும் உப்பில்லாத உணவை தான் சாப்பிட தயார் என்று தெரிவித்தார். தற்சமயம் தன்னுடைய தவ ஆற்றல் காரணமாக அந்தணராக வந்திருப்பது திருமால் என்பதை அறிந்து கொண்டு தன்னுடைய மகள் துளசியை அவருக்கே மணமுடித்து கொடுத்தார் மார்க்கண்டேய மகரிஷி.

உப்பில்லா உணவை சாப்பிடுவதற்கு ஒப்புக்கொண்டதால் உப்பிலியப்பன் என்றும், ஒப்பில்லாத பெருமை கொண்டவர் என்பதால் ஒப்பிலியப்பன் என்றும் இந்த தல பெருமாள் பெயர் பெற்றார். துளசி தேவி பெருமாளின் இதய ஸ்தானத்தில் துளசி மாலையாக இடம்பெற்ற இந்த நிகழ்வுக்குப் பிறகு தான் அனைத்து பெருமாள் கோவில்களிலும் துளசி மாலை சாத்தும் வழக்கமானதாக சொல்லப்படுகிறது.

மார்க்கண்டேய மகரிஷியிடம் பங்குனி மாத திருவோண நட்சத்திரத்தில் திருமால் துளசியை பெண்கேட்டு வந்து ஐப்பசி மாதத்தில் திருமணம் செய்துகொண்டார். ஆகவே இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் நட்சத்திரத்தன்று பெருமாள் சன்னதியில் சாம்பிராணி தூபம் காட்டப்பட்டு அகண்ட தீபமும், வால் தீபமும், ஏற்றப்படுகிறது.

இந்த தீப ஒளியில் மகாலட்சுமி இருப்பதாக ஐதீகம். இந்த தீப தரிசனம் செய்பவர்களுக்கு செல்வச்செழிப்பு உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்த கோவிலில் சுவாமிக்கு காட்டிய தீபத்திற்கு முன்னால் அருள்வாக்கு கூறும் வழக்கமும் இருக்கிறது.

நம்மாழ்வார் இவரை யாருக்கும் உப்பில்லாமல் உயர்ந்தவர் என்று மங்களாசாசனம் செய்துள்ளார். இவருக்கு பெருமாள் ,திருவிண்ணகரப்பன்,பொன்னப்பன்,மணியப்பன்,என்னப்பன்,முத்தப்பன், உள்ளிட்ட 5 கோலங்களில் காட்சித் தருகிறார்.

இந்த கோலங்களில் முத்தப்பன் சன்னதியை தவிர மற்ற அழைப்பு விருதுகளுக்கான சன்னதிகள் இருக்கின்றன. இந்த கோவிலில் அனைத்து உணவுகளும் உப்பு சேர்க்காமல் தான் தயாரிக்கப்படுகின்றன. அதோடு இந்த கோவிலுக்கு உப்பு கலந்த உணவுகளை கொண்டுசெல்வது தோஷமாக கருதப்படுகிறது.

இந்தக் கோவிலின் தீர்த்தமான அஹோத்ர புஷ்கரணியில் பகலிரவு உள்ளிட்ட 2 வேலைகளிலும் நீராடலாம் என்பது சிறப்பம்சமாகும். மார்க்கண்டேய மகரிஷி வசித்த தலம் என்பதால் இந்த கோவிலில் வழிபடுவர்களுக்கு ஆயுள் கூடுகிறது.

இங்கே ஆயுள் விருத்தி தரும் மருதுஞ்சய ஹோமமும் செய்யப்படுகிறது. பிரிந்து வாழும் தம்பதிகள் கருத்து ஒற்றுமை இல்லாத கணவன்-மனைவி உள்ளிட்டோர் இங்கே வந்து வழிபடுவதால் தம்பதிகளிடையே ஒற்றுமை ஏற்படும் என்பது அனுபவம் பெற்ற பக்தர்களின் கருத்தாக இருக்கிறது.

நடைத் திறக்கும் நேரம்
காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரை மாலை 4 மணிமுதல் இரவு 8 மணிவரை

அமைவிடம்

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருநாகேஸ்வரம் என்ற ஊரில் அமைந்திருக்கிறது தஞ்சை நகரிலிருந்து இந்த ஊருக்கு வாகன வசதிகள் இருக்கின்றன.

கோவில் முகவரி

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருநாகேஸ்வரம் தஞ்சை மாவட்டம் 612204