தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் ஒரே கட்டமாக தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவிருக்கிறது பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.
சென்ற மாதம் 28ம் தேதி ஆரம்பித்த வேட்புமனுத்தாக்கல் நாளையுடன் நிறைவு பெறவிருக்கிறது, வேட்புமனு பரிசீலனை நாளை மறுநாள் நடைபெறும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி வரையில் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் ஒருநாள் மட்டுமே அவகாசமிருக்கின்ற சூழ்நிலையில், எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியிருக்கின்றனர். அந்த விதத்தில் ஆளுங்கட்சியான திமுக நேற்று 6 மற்றும் 7ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 8வது கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது.
இந்த 8வது கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், விழுப்புரம், புதுக்கோட்டை, கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதோடு ஆவடி, ஈரோடு, கடலூர், கோயமுத்தூர், உள்ளிட்ட மாநகராட்சிகளின் வேட்பாளர்கள் இதில் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சென்னை மாநகராட்சியில் 17 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன அதோடு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6-வார்டுகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.