காபூல் விமான நிலையத்தில் மீண்டும் ஒரு தாக்குதல்? எச்சரிக்கை விடுத்த அமெரிக்க உளவுத்துறை!

Photo of author

By Sakthi

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கே இருக்கும் வெளிநாட்டினர் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்கள் என்று ஆயிரக்கணக்கானோர் அந்த நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையம் முன்பு திரண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், அவர்களை வெளியேற்றும் வேலைகளில் அமெரிக்க ராணுவப் படை ஈடுபட்டுவருகின்றது. இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தப்படலாம் ஆகவே அங்கு செல்வதை தடுக்க வேண்டும் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை செய்திருக்கிறது .

அந்த எச்சரிக்கை குடுத்த ஒரு சில மணி நேரங்களிலேயே காபூல் விமான நிலையம் முன்பு இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் 12 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் இதுவரையில் உயிரிழந்திருக்கிறார்கள் இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருக்கிறது.

காபூல் விமான நிலையத்தில் பொது மக்களை வெளியேற்றும் பணி மறுபடியும் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், காபூல் விமான நிலையத்தில் மறுபடியும் ஒரு தாக்குதல் நடத்தப்படலாம் என்று இன்று அமெரிக்க உளவுத்துறை புதிய எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இதுதொடர்பாக அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவிக்கும்போது காபூல் விமான நிலையத்தில் இன்னமும் நம்பகமான அச்சுறுத்தல் இருப்பதாக நாங்கள் கருதுகின்றோம் என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க தூதரகம் சார்பாக ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் காபூல் விமான நிலையத்தில் மறுபடியும் பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே காபூல் விமான நிலையத்தில் அபி நுழைவு வாயில் கிழக்கு, வடக்கு அல்லது புதிய அமைச்சர்கள் நுழைவுவாயில் உள்ளிட்டவற்றில் இருக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நாங்கள் அமெரிக்க குடிமக்களுக்கு காபூல் விமான நிலையத்தை நோக்கி செல்வதையும் விமான நுழைவாயிலில் குவிய வேண்டாம் எனவும், தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் என்று அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.