நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் அனைத்தும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை நோக்கி செயல்பட ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு கட்சிகளும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சிக்கு இழுக்கும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. இதில் பாஜக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு செயல்படுகின்றன.
இந்நிலையில் வடசென்னையை கலக்கிய மாஜி ரவுடியான கல்வெட்டு ரவி என்பவர் பாஜகவில் இணைந்துள்ளது அக்கட்சியினர் மத்தியிலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடசென்னையில் பிரபல ரவுடியான மாலைக்கண் செல்வம் கோஷ்டியில் இருந்தவர் தான் இந்த கல்வெட்டு ரவி. இதுவரை இவர் மீது 6 முறை குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
மேலும் இவர் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காரணத்தால் சமீப காலமாக கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில் திடீரென்று அவர் தமிழக பாஜகவின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
அப்போது பாஜக நிர்வாகிகள் முன்னிலையில் பேசிய கரு. நாகராஜன், “ரவிஷங்கர் என்ற கல்வெட்டு ரவி வடசென்னையில் மீன்பிடி படகுகள் வைத்திருக்கிறார். அதன் மூலம் அப்பகுதியிலுள்ள இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார். மேலும் இவர் வடசென்னையில் இளைஞர் பட்டாளத்தை தமக்கு பின்னால் வைத்திருக்கக் கூடியவர் என்றும் கூறினார்.