கொரோனாவால் அவதிப்படும் இந்நேரத்தில் இப்படியொரு அறிவிப்பா? தடை கேட்டு தமிழக அரசை வலியுறுத்தும் வைகோ

0
119
Vaiko-News4 Tamil Online Tamil News
Vaiko-News4 Tamil Online Tamil News

கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரும்பாலான மக்கள் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ள இந்நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் கல்விக்கட்டணத்தை உடனடியாகவும், மொத்தமாகவும் செலுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனையடுத்து கட்டணத்தை தவணை முறையில் வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.

கொரோனா பேரிடரால், உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்து பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பெரும்பான்மையான மக்கள் வீதிக்கு வருகின்ற அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கிற உயர்க்கல்வி நிறுவனங்கள் நடப்பு ஆண்டிற்கான கல்விக் கட்டணத்தை உடனடியாகவும், மொத்தமாகவும் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம், ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ள மாணவர்கள் செமஸ்டர் கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லையேல், இந்த மாதம் 26 ஆம் தேதிக்குள் அபராதத்துடன் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளதோடு, கட்டணம் செலுத்தாவிட்டால் ஆராய்ச்சி மாணவர்களின்  (Ph.D.,)பதிவு ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்து உள்ளது.

 

என்.ஆர்.ஐ, சி.ஐ.டபிள்யூ.ஜி.சி (NRI, CIWGC) ஒதுக்கீட்டின் கீழ், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சி.இ.ஜி, எம்.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் வெளிநாடுவாழ் தமிழக மாணவர்கள், நடப்பு ஆண்டிற்கான ( 2020 – 2021) கல்விக் கட்டணத்தை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர் விவகாரங்களுக்கான மையம், நடப்பு கல்வி ஆண்டுக்கான கல்விக் கட்டணத்தையோ, கடந்த கல்வி ஆண்டுக்கான (2019 – 2020) பாக்கி கட்டணத்  தொகையையோ செலுத்த மாணவர்களையும், பெற்றோர்களையும் கட்டாயப்படுத்தக் கூடாது. கட்டணம் செலுத்த தாமதமானால் அபராதத் தொகை வசூலிப்பது சட்டவிரோதம் ஆகும். மேற்கண்ட, உத்தரவை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளது. கோவிட் – 19 நுண்ணுயிர் தொற்று பாதிப்பைக் கருத்தில் கொண்டு, உலக நாடுகள் கல்விக் கட்டணத்தை குறைப்பது தொடர்பாக பரிசீலித்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் உள்ள உயர்க்கல்வி  நிறுவனங்கள் கட்டாய கட்டண வசூலிப்பில் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்கு உரியதும், மனிதாபிமானம் அற்ற செயலுமாகும்.

 

பெரும்பாலான பெற்றோர்கள், கூலி வேலை செய்தும், குறைந்தபட்ச ஊதியத்தை பெறும் பணிகளில் ஈடுபட்டும் தான் தங்களது பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணத்தை செலுத்தி வருகின்றார்கள். தங்களது வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாகி இருக்கிற நிலையில், பெற்றோர்களையோ, மாணவர்களையோ மொத்தமாக கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என நிர்பந்திக்கக் கூடாது. பெற்றோர்களும், மாணவர்களும், கல்வியாளர்களும், அரசியல் இயக்கங்களும், சமூக ஆர்வலர்களும், கல்விக் கட்டண குறைப்பை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களும் குறைந்தபட்சம் தவணை முறையிலாவது கட்டணத்தை செலுத்த அனுமதிக்க வேண்டும். கல்விக் கட்டணம் செலுத்த தாமதமானால் எந்தவிதமான அபராதத் தொகையையும் வசூலிக்க கூடாது என, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களுக்கும் தமிழக அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும் என முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Previous articleசைலண்டாக திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை!
Next articleஅதிகார மமதையில் மத்திய அரசு செய்த காரியம்! கண்டிக்கும் மருத்துவர் ராமதாஸ்