முருகனுக்கு உகந்த பாடல்கள் என்றாலே கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இது போன்றவைகள் தான் முதலில் நமக்கு ஞாபகம் வரும். ஆனால் பார்வதி தேவி தனது ஒட்டுமொத்த சக்தியையும் கொடுத்து ஒரு வேலினை உருவாக்கி, அதனை முருகப்பெருமானின் கைகளில் கொடுத்துள்ளார். அத்தகைய சிறப்பிற்குரிய வேலை போற்றும் வகையில் அமைந்திருக்கும் பாடல் தான் இந்த “வேல்மாறல்”.
எவர் ஒருவர் இந்த வேல் மாறலை தினமும் பாராயணம் செய்து வருகிறார்களோ, அவர்களுக்கு இந்த வேலினுடைய சக்தி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு சிலருக்கு இந்த வேல் மாறலை முழுவதுமாக படிப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை மற்றும் அந்த வரிகளை உச்சரிப்பதிலும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இவ்வாறு படிக்க முடியாதவர்கள் வேல் மாறலுக்கு உரிய இந்த நான்கு வரிகளை மட்டும் தினமும் படித்தால் போதும், வேல்மாறலை முழுவதுமாக படித்ததற்கு உண்டான பலன் நிச்சயமாக கிடைக்கும். வேலினை வைத்து வழிபடுபவர்கள், முருகனுக்கு அருகில் இந்த வேலினை வைத்து தினமும் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.
வேலினை வைத்து இந்த வேல் மாறலை தினமும் கூற விரும்புபவர்கள், தினமும் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, வேலுக்கு சந்தனம் குங்குமம் வைத்து, தீபம் ஏற்றி வேல்மாறலை பாராயணம் செய்யலாம். இவ்வாறு வேலினை வைத்து வழிபாடு செய்பவர்கள் வாரந்தோறும் முருகனுக்கு உகந்த செவ்வாய்க்கிழமைகளில் சிறியதாக ஒரு அபிஷேகத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும்.
வேல் இல்லாதவர்கள் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பாக தீபம் ஏற்றியும், இந்த பாடலை பாராயணம் செய்து மனதார வேண்டிக் கொள்ளலாம். இந்த வேல்மாறல் பாடலை உங்களால் எந்த நேரத்தில் முடியுமோ, அந்த நேரத்தில் பாராயணம் செய்து கொள்ளலாம்.
தீராத துன்பங்கள் உங்களை வாட்டி வதைக்கின்ற பொழுது, வேறு எவரும் உங்களுக்கு உறுதுணையாக இல்லை என்று நினைக்கும் பொழுது, முருகனை மனதார நினைத்து அவரை அழைத்து, இந்தப் பாடலை பாராயணம் செய்தால் போதும். அவர் ஓடோடி வந்து உங்களுக்கு தேவையான அனைத்து பலன்களையும் அள்ளித் தருவார்.
உங்களுக்கு ஏதேனும் ஒரு வேண்டுதல்கள், தேவைகள், ஆசைகள் இதுபோன்று எதுவாக இருந்தாலும் அது நிறைவேற வேண்டும் என்று, முருகனை நினைத்து தினமும் இந்த வேல் மாறலை பாராயணம் செய்வதன் மூலம், நிச்சயம் உங்களது வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும்.
வேல்மாறல் வரிகள்:
“திருத்தணியில் உதித்(து)தருளும்
ஒருத்தன்மலை விருத்தம் என(து)
உளத்தில்உறை கருத்தன்
மயில் நடத்துகுகன்வேலே”
வேல்மாறல் பாடலை முழுவதுமாக பாராயணம் செய்ய முடியும் என நினைப்பவர்கள், முருகப்பெருமான் படத்திற்கு அல்லது வேலுக்கு முன்பாக அமர்ந்து பாராயணம் செய்து கொள்ளலாம். முடியாதவர்கள் இந்த 4 வரிகளை மட்டும் 16 முறை கூறினால் போதும் முழு பாடலை படித்ததற்கான பலன் கிடைக்கும்.
இவ்வாறு பாடலை பாராயணம் செய்து பூஜை செய்து முடித்த பிறகு, ஏதேனும் ஒரு முக்கியமான செயலுக்காக வெளியில் செல்கிறீர்கள் என்றால், அதில் எந்த தடைகளும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால், இந்த வேலினையும் உங்களுக்கு துணையாக எடுத்துக் கொண்டு செல்லலாம்.
இவ்வாறு எடுத்து செல்லும் பொழுது எந்தவித தடைகளும் ஏற்படாமல் காரிய வெற்றி ஏற்படும். இந்த வேல் மாறலின் சிறப்புகளை மற்றவர்கள் கூறுவதை கேட்பதை காட்டிலும், நீங்களாகவே 48 நாட்கள் தொடர்ந்து வேல்மாறலை பாராயணம் செய்து, முருகப்பெருமானை வணங்கி வரும்பொழுது ஏற்படக்கூடிய மாற்றங்களை கண்டு நீங்களே வியந்து போவீர்கள்.