எனக்கும் ஆசைதான்!. ஆனா அஜித்தை கணிக்கவே முடியாது!.. வெங்கட்பிரபு ஃபீல் பண்ணிட்டாரே!..

நடிகர் அஜித் மற்ற நடிகர்கள் போல் இல்லை. சூப்பர் ஹிட் கொடுக்கும் இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என நினைக்கமாட்டார். புதுப்புது இயக்குனர்களை அறிமுகம் செய்வார். அல்லது ஒரு படம் இயக்கியவரை கூட அழைத்து படம் கொடுப்பார். எஸ்.ஜே.சூர்யாவை கூட வாலி படம் மூலம் இயக்குனராக்கியவர் இவர்தான்.

இப்போது ஆதிக் ரவிச்சந்திரனுக்கு குட் பேட் அக்லி பட வாய்ப்பை கொடுத்திருக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தபோது அஜித்துக்கு பழக்கமானார் ஆஜித். ஆதிக் அடிப்படையில் ஒரு அஜித் ரசிகர். அந்த படத்தில் நடிக்கும்போதே ‘நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்’ என சொல்லியிருக்கிறார் அஜித்.

அந்த நம்பிக்கையில்தான் மார்க் ஆண்டனி படத்தின் கதையை ஆதிக் எழுதியிருக்கிறார். விஷால் – எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்து அஜித்தை வைத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் வெளியாகி 5 நாட்களில் இப்படம் உலகமெங்கும் 150 கோடியை வசூல் செய்திருக்கிறது. இந்தியாவில் இப்படம் 100 கோடியை வசூல் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த படத்தை இயக்கியது பற்றி பேசியுள்ள ஆதிக் ‘அஜித் சார் என்னை நம்பும்போது நான் ஒன்றுமே இல்லை. நான் இயக்கிய படம் தோல்வி அடைந்திருந்த நேரம் அது. அவர் எப்படி என்னை நம்பினார் என தெரியவில்லை. அவருக்கு மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன் என பேசியிருந்தார். இதே கருத்தைத்தான் வெங்கட்பிரபும் சொல்லியிருந்தார். மூன்று சின்ன படங்களை இயக்கியிருந்த எனக்கு மங்காத்தா படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். மங்காத்தா 2 படத்தை நான் எடுக்க வேண்டும் என அஜித் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். எனக்கும் அந்த ஆசை இருக்கிறது.

அதேநேரம், அது மங்காத்தா 2-வாக இல்லாமல் வேறு ஒரு கதையை அஜித்திடம் சொல்லி அவரை சம்மதிக்க வைத்து அந்த படத்தை இயக்கலாமா என்கிற எண்ணமும் இருக்கிறது. ஆனால், அஜித் சாரை பொறுத்தவரை எப்போது எந்த இயக்குனரை தேர்வு செய்வார் என கணிக்கவே முடியாது’ என சொல்லியிருக்கிறார்.