அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை! புன்னகையுடன் எதிர் கொண்ட முன்னாள் அமைச்சர்!

Photo of author

By Sakthi

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியபோது வெளியே அவருடைய ஆதரவாளர்களுக்கு தக்காளிசாதம் வினியோகம் செய்யப்பட்டது என்று தெரிகிறது. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுமணி, சி விஜயபாஸ்கர், கே சி வீரமணி, தமிழக கூட்டுறவு வங்கி மாநில தலைவராக இருந்த இளங்கோவன், இவர்களை தொடர்ந்து நேற்றைய தினம் முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் சென்னை, நாமக்கல், கரூர், ஈரோடு, சேலம் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, உள்ளிட்ட வெளி மாநிலங்களில் நேற்று ஒரே நாளில் 69 பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத 2 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய், தங்க, வெள்ளி, நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை லஞ்ச ஒழிப்புத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையில் பள்ளிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் நேற்று சோதனை நடைபெற்றுக் கொண்டிருந்தது என தெரிந்தவுடன் அவருடைய வீட்டின் முன்பு தங்கமணியின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடினார்கள். பொய் வழக்கு போடும் திமுக அரசை கண்டிக்கிறோம் என்று அங்கு கூடியிருந்தவர்கள் கோஷம் எழுப்பினார்கள். நோய்தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தினார்கள் அதை காதில் வாங்குவதாக தெரியவில்லை.

இதனைத் தொடர்ந்து அங்கு முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, செங்கோட்டையன், கருப்பண்ணன், உள்ளிட்டோரும் வந்ததால் அந்த இடம் இன்னும் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய வேலுமணி முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சனம் செய்தவர்கள் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு சோதனையை நடத்துகிறார்கள். இதற்கு முன்னால் இருந்தவர்கள் இதுபோன்ற காழ்ப்புணர்ச்சியுடன் நடந்துகொண்டதில்லை. பிரதமரை தற்போது இருக்கின்ற முதலமைச்சர் போல யாரும் விமர்சித்தது இல்லை. ஆனால் அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதிமுக ஆட்சி நீடித்ததற்கு தங்கமணியும் ஒரு காரணம். இதன் காரணமாக, பழிவாங்கும் நடவடிக்கையாக இது போன்ற செயல்களை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில், தங்கமணியின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு டெம்போ மூலமாக தக்காளி சாதம் வழங்கப்பட்டது. அதேபோல சேலம் நெடுஞ்சாலை பகுதியில் வசிக்கும் தங்கமணியின் மகன் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது. அப்போது வெளியே அதிமுகவினர் போராட்டத்தில் குதித்தார்கள். அவர்களுக்கு மதிய உணவாக தக்காளி சாதமும், தயிர் சாதமும், வழங்கப்பட்டது. காலையில் கீரை மற்றும் போண்டாவும் ,டீயும் வழங்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இதன் மூலமாக இந்த சோதனையை தங்கமணி மிகவும் சாதாரணமாகவே எதிர்கொண்டார் என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் இந்த அதிரடி சோதனைக்கு கடுமையான கண்டனம் தெரிவித்து இருக்கின்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி பொதுமக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்திருக்கும் திமுக அரசு நாளை தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கின்ற அதிமுகவின் போர்படை தலைவர்களைப் பார்த்து அசாம் கொள்ளவேண்டிவரும் அதன் வெளிப்பாடுதான் இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை என குறிப்பிட்டார்கள்.

எதிர்த்துப் பேசினால் குண்டர் சட்டம், கருத்து தெரிவித்தால் குண்டர் சட்டம், தீவிரம் காட்டினால் வழக்கு, தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்து கொள்கை பிடிப்புடன் இருந்தால் லஞ்ச ஒழிப்பு சோதனை என்று பின்வாசல் வழியாகவே பயணம் செய்த திமுக, இந்த நிகழ்வையும் புறவாசல் சரியாகவே கையாண்டு வருகிறது என தெரிவித்தார்கள். திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை சட்டப்படி நாங்கள் எதிர்கொள்வோம் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.