TVK: தமிழக அரசியல் களத்தில் புதிய அலையாக உருவெடுத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம். கரூரில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து 3 நாட்களுக்கு பின் காணொளி ஒன்றை வெளியிட்ட விஜய் பாதிக்கப்பட்டவர்களை விரைவில் சந்திப்பேன் என்றும், 20 லட்சம் நிவாரணமும் வழங்குவதாகவும் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை வரவழைத்து ஆறுதல் கூறினார் விஜய்.
இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தவெக இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் சம்பவத்தை பற்றி ஆயிரம் பேர் ஆயிரம் விதமாக பேசலாம். ஆனால் எண்களின் வருத்தம் அந்த 41 பேரின் உயிரிழப்பு தான். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் முழு பொறுப்பையும் ஏற்பார் என்றும் தெரிவித்தார். சிபிஐ சம்மன் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அந்த சம்மன் இன்னும் எங்கள் கைக்கு வரவில்லை என்றும், சம்மன் வந்தால் நானும், புஸ்ஸி ஆனந்தும் நீதிமன்றத்தை அணுகி உரிய விளக்கத்தை அளிப்போம் என்று கூறினார்.
மேலும், விஜய் மக்கள் சந்திப்பை விரைவில் அறிவிப்பார். நீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளுடன் தகுந்த முறையில் அடுத்த பிரச்சாரம் நடைபெறும் என்றும் தெரிவித்தார். இனிமேல் தான் விஜய் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வை அறிவிப்பார் என்றும் கூறினார். கரூர் சம்பவம் நிகழ்ந்த பிறகு விஜய் அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பார், இனிமேல் அரசியல் கூட்டங்களை நடத்த மாட்டார் என்று அனைவரும் கூறி வந்தனர். ஆனால் இந்த நிகழ்வு விஜய்யை மேலும் பலப்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம். விஜய்யின் அடுத்த கட்ட அரசியல் பயணம் எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

