TVK: த.வெ.க தலைவர் விஜய் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வெற்றி பெறுவதற்கான பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தனது தேர்தல் பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளார். அவரின் முதல் பிரச்சாரம் திருச்சி மரக்கடை பகுதியில் இன்று தொடங்கியுள்ளது. அவர் ஏன் முதலில் இந்த பகுதியை தேர்தெடுத்தார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திருச்சி மரக்கடை பகுதி என்பது தமிழக அரசியலில் ஒரு முக்கியமான இடமாகக் கருதப்படுகிறது. இங்கு பல கட்சிகளின் முன்னணி தலைவர்கள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் மரக்கடை பகுதியில் பல்வேறு தேர்தல் பிரச்சாரங்களை நடத்தியது வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றது.
எம்.ஜி.ஆர்.- அவர்களுக்கு மரக்கடை பகுதியில் ஒரு சிலை உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ஜெயலலிதா தலைமையிலான அதிமுக-வும், எம்.ஜி.ஆர்-யின் நினைவுகளை முன்னிலைப்படுத்தும் வகையில் மரக்கடை பகுதியில் பெரிய கூட்டங்களை நடத்தி வந்தனர். அதே நேரத்தில் மு.கருணாநிதி தலைமையிலான திமுக-வும் தனது பிரச்சாரங்களை இப்பகுதியில் நடத்தியது.
மரக்கடை பகுதி அதிமுக–திமுக விற்கு முக்கிய தேர்தல் களமாக மாறியது. இவர்களை தொடர்ந்து மு.க. ஸ்டாலின், ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோரும் தங்களின் பிரச்சாரங்களை இங்கு மேற்கொண்டுள்ளனர். தற்போது 2025-இல் நடிகர் விஜய் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை மரக்கடை பகுதியில் தொடங்கியிருப்பது, பேசு பொருளாகவும் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.
இவர் தேர்ந்தெடுத்த இந்த பகுதி எம்.ஜி.ஆர்-யின் அரசியலை நினைவுப்படுத்தும் வகையில் உள்ளதாகவும், இது மக்களிடையே ஒரு அரசியல் சென்டிமென்டை உருவாக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர்-யின் பெயரும் புகழும் இன்றும் பேசப்பட்டு வரும் நிலையில், விஜய் அந்த செண்டிமென்டை தனது அரசியல் தொடக்கத்துடன் இணைக்க முயல்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
அதே நேரத்தில் தமிழக அரசியலில் தனது அடையாளத்தை உருவாக்குவதாகவும் இது உள்ளது. மேலும் முன்னணி தலைவர்களின் வரிசையில் இடம்பெறுவதற்கான முதல் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.