TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் களம் ஈடுபட்டுள்ளது. இந்த சமயத்தில் தான் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக உள்ளது விஜய்யின் ஈரோடு பரப்புரை. கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக தமிழகத்தில் மேற்கொள்ளும் முதல் பிரச்சாரம் என்பதால், இதற்கான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் இது நடந்து முடிந்துள்ளது என்றே சொல்லலாம்.
எப்போதும் போல திமுகவை வம்பிழுத்த விஜய், பாஜகவை பற்றி ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசினார். பாஜகவை கடுமையாக விமர்சிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அது ஏமாற்றத்தில் முடிந்தது. மேலும், தற்போது களத்தில் இருக்கும் திமுகவை மட்டும் தான் எதிர்ப்போம் என்றும், எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது என்றும் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்திருந்தார். இவ்வாறு பிரச்சாரம் களைகட்டிய நிலையில், அண்மையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது போல, இன்னும் சிலர் இணைய இருக்கிறார்கள்.
அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும் என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இவர் கூறிய இந்த செய்தி அதிமுகவினர் மத்தியிலும், அரசியல் வட்டாரத்திலும் விவாதத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு பிரச்சாரத்தில் மக்கள் முன்னிலையில் சில அமைச்சர்கள் இணைவார்கள் என்று நினைத்த நிலையில் அது ஈடேறவில்லை. இந்நிலையில் இன்னும் சிலர் சேர இருக்கிறார்கள் என்று விஜய் அவர் வாயால் கூறியது, இணைவு விழா மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்பதை உணர்த்தி இருக்கிறது.