DMK TVK COMMUNIST: இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால் தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் கூட்டணி தலைமையிடம் தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகள் பேச ஆரம்பித்து விட்டன. இன்னும் சில கட்சிகளின் கூட்டணி இன்னும் உறுதி செய்யப்படாமலேயே உள்ளது. இந்நிலையில் தான் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து பெரியளவில் ஆதரவை திரட்டியுள்ளார். இதனால் இவருடன் கூட்டணி அமைக்க பல்வேறு கட்சிகளும் முந்தியடுத்து கொண்டு சென்றன.
அதில் முக்கியமானது மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுகவும், தேசிய கட்சியான பாஜகவும் தான். இந்த இரண்டு கட்சிகளும் பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து அனைவரும் அறிந்த ஒன்று. இது மட்டுமல்லாது, விஜய் அரசியல் எதிரி என்று கூறிய திமுகவின் கூட்டணி கட்சிகள் பலவும், தவெக உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. கூட்டணிக்கு ஆசைப்பட்டனர் என்பதை விட, திமுகவிடம் அதிக தொகுதிகளை பெற விஜய்யை பயன்படுத்தினர் என்பது தான் உண்மை. இதனை முதலில் காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த நிலையில், இதற்கு பிறகு விசிக தொடர்ந்தது.
காங்கிரஸும், விசிகவும் தவெக உடன் பேசி வருகின்றனர் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விஜய்யின் அரசியல் பிரவேசம் திமுகவிற்கு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது என்றே சொல்லலாம். அந்த வகையில் தற்போது புதிதாக, திமுக கூட்டணியில் பல காலமாகவே அங்கம் வகித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசிய போது, விஜய் திமுகவை தீய சக்தி என்று கூறியதை ஏற்க முடியாது.
விஜய்யிடம் நல்ல திட்டங்கள், கொள்கைகள், புதிய சிந்தனைகளை எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி எதுவுமில்லாமல் ஏமாற்றத்தையே அவர் பரிசளித்துள்ளார் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து விஜய் அரசியலுக்கு வந்த போது அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த எதிர்பார்ப்பை வைத்திருந்தது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. திமுக உடன் பயணித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் விஜய் நல்ல திட்டங்களை கொண்டு வருவார் என்று நினைத்தது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.