DMK TVK CONGRESS: 2026 க்கான சட்டமன்ற தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடைபெற இருப்பதால் தமிழக அரசியல் அரங்கு மிகவும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான் தமிழ் திரையுலகில் மிக பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை தமிழக வெற்றிக் கழகம் என்னும் அரசியல் கட்சியாக மாற்றியிருக்கிறார். இந்த கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்திலிருந்தே இதற்கான ஆதரவு யாரும் எதிர்பார்த்திராத அளவு இருந்தது. இதனால் விஜய் கூட்டணியில் சேரவும், அவரை கூட்டணியில் சேர்க்கவும் திராவிட கட்சிகளும், தேசிய கட்சிகளும் முயற்சித்தன. விஜய் திமுகவையும், பாஜகவையும் எதிரி என்று கூறியதால், காங்கிரஸ் அல்லது அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என்று யூகிக்கப்பட்டது.
ஆனால் விஜய் தான் முதல்வர் வேட்பாளர், தவெக தலைமையில் தான் கூட்டணி என்ற நிபந்தனையை இபிஎஸ் ஏற்காததால் இந்த கூட்டணி கிடப்பிலேயே உள்ளது. தற்போது காங்கிரஸ் கட்சி மட்டுமே மீதமிருப்பதாலும், விஜய் காங்கிரசுடன் நெருக்கம் காட்டி வருவதாலும் இவர்களின் கூட்டணி உறுதியாகும் என்று பலரும் கூறினார்கள். இதனை மேலும் வலுபடுத்தும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி 9 ஆம் தேதி திரைக்கு வரவிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் வழங்காத காரணத்தினால் தற்போது வரை அந்த படம் திரைக்கு வராமல் உள்ளது.
தணிக்கை வாரியம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பாஜக வேண்டுமென்றே சதி செய்கிறது என்று விமர்சிக்கபட்ட நிலையில், தற்போது திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியும் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது புது புயலை கிளப்பியுள்ளது. இது குறித்து சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர், ஜனநாயகன் படத்தை தடுப்பதற்கான முயற்சி, தமிழ் கலாச்சாரத்தின் மீது நடத்தபடும் தாக்குதலாகும் என்றும், மோடி அவர்களே தமிழ் மக்களின் குரலை ஒடுக்குவதில் நீங்கள் ஒரு போதும் வெற்றி பெற மாட்டீர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு, காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகுவதற்கான சமிக்கையாகவே பார்க்கப்படுகிறது.