TVK MDMK BJP: அடுத்த வருடம் நடைபெற போகும் சட்டசபை தேர்தலுக்காக தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுகள், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், பாமகவில் நிலவும் தந்தை-மகன் பிரச்சனை, விஜய்யின் அரசியல் வருகை போன்றவை இந்த சமயத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் திராவிட கட்சிகள் தொடங்கி தேசிய கட்சிகள் வரை அனைத்தும் கூட்டணி கணக்குகளை வகுத்து வருகின்றன. தற்போது அதிமுக உடன் பாஜக, தமாகா போன்ற கட்சிகள் மட்டுமே கூட்டணி அமைத்துள்ளது. திமுக உடன் விசிக, காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தொடர்ந்து அங்கம் வகித்து வருகின்றன.
இந்நிலையில் தவெக தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்ற நிபந்தனையை ஏற்கும் கட்சிகள் தவெக உடன் கூட்டணி சேரலாம் என்று தவெகவை சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். மேலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று விஜய் கூறிய போதும் கூட, தற்போது வரை எந்த கட்சியும் சேராமல் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறான நிலையில் விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்ட பாஜக அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. ஆனால் பாஜகவை கொள்கை எதிரி என்று விஜய் கூறியதால் அதனுடன் கூட்டணி இல்லை என்பதில் உறுதியாக இருந்து வந்தார்.
தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக மதிமுகவை சேர்ந்த துரை வைகோ ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். விஜய் கூட்டணி குறித்து பேசிய அவர், விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். அவர் மாதவாத சக்தியை எதிர்க்கிறார். விஜய் அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய மாட்டார். ஏனென்றால் அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்று கூறியுள்ளார். பாஜக விஜய்க்கு தொடர்ந்து அழைப்பு விடுத்து வரும் நிலையில், துரை வைகோ இவ்வாறான கருத்தை கூறியிருப்பது பாஜக வட்டாரத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.