TVK: அடுத்த 6 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், கூட்டணி வியூகங்களும், தொகுதி பங்கீடும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நடைபெறும் தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது அதிமுகவும், திமுகவும் தான். தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகளை மிஞ்சும் அளவிற்கு உருவெடுத்துள்ளது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தவெகவிற்கு பெருகிய ஆதரவு இதுவரை எந்த ஒரு கட்சிக்கும் கிடைத்தது இல்லை என்றே சொல்லலாம்.
இதுவே தவெகவின் முதல் வெற்றி என தவெக தலைவரும், தொண்டர்களும் கூறி வந்த நிலையில், இதனை மேலும் பலப்படுத்த மக்களை சந்திக்கும் பணியை விஜய் தொடங்கினார். இதில் கரூரில் நடந்த பிரச்சாரம் யாரும் எதிர்பாராத அளவு உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர் சுமார் 1 மாத காலமாக முடங்கி இருந்த தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை கூட்டியது. இதில் கலந்து கொண்ட தவெக முக்கிய நிர்வாகியும், விஜய்க்கு மிகவும் நெருக்கமானவருமான ஆதவ் அர்ஜுனா, தவெக கடுமையாக எதிர்த்து வரும் திமுகவிற்கு கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் ஆதரவு தெரிவித்தார் என்று கூறி பரபரப்பை கிளப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த விஜய் ஆதவ் அர்ஜூனாவை கண்டித்ததாக தவெகவை சேர்ந்தவர்கள் கூறினார்கள். இப்படி இருக்கும் சமயத்தில் திமுக எங்களுக்கு எதிரியே இல்லை என்பது போன்ற கருத்தை ஆதவ் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு என்பதே என்னுடைய நிலைப்பாடு. அப்படி பார்த்தால் அதிமுகவும் எங்களுக்கு எதிரி இல்லை. திமுகவும் தனிப்பட்ட முறையில் எதிரி இல்லை என்று பேசியுள்ளார்.
இவரின் இந்த கருத்து விஜய்க்கு மேலும் கோபத்தை வரவழைத்து உள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இது மட்டுமல்லாமல், கரூர் சம்பவத்திற்கு பின் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்தை பதிவிட்டிருந்த ஆதவ் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இவ்வாறு கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வருவதால் ஆதவ் அர்ஜுனா மீது விஜய் அதிருப்தியில் உள்ளார் என்று பலரும் கூறுகின்றனர்.

