ADMK DMDK: சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி, எதிர்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். திமுகவிடமிருந்து மக்களை காப்பற்றி தமிழகத்தை மீட்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த பயணம் தொடங்கப்பட்டுள்ளது. விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்தே அவர் அதிமுக உடன் கூட்டணி சேர்வார் என்று பேசப்பட்டது.
இதனை தொடர்ந்து சமீப காலமாக அதிமுக பிரச்சாரங்களில் தவெக கொடி பறந்தது அனைவரது மத்தியிலும் பேசு பொருளானது. இதுகுறித்து விஜய் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில், தவெகவின் இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமார் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், தவெகவின் கூட்டணி நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்பதை வெளிப்படையாக கூறியிருந்தார். இதனால் தவெகவிற்கு அதிமுக உடன் கூட்டணி வைக்க விருப்பமில்லை என்பது தெளிவானது.
2026 தேர்தலுக்காக அதிமுகஉடன் பாஜக கூட்டணி மட்டுமே உறுதி செய்யப்பட்ட நிலையில், அதனுடன் தவெகவும் இணைந்தால் ஆட்சி உறுதி என்று நினைத்திருந்த இபிஎஸ்க்கு இது பேரிடியாக இருந்தது. இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கிறது தேமுதிக. தேர்தல் சமயத்தில் தேமுதிக, அதிமுக, திமுக போன்ற இரண்டு கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதிமுக அதிக தொகுதிகளை தர மறுத்துள்ளது, இதனால் திமுகவிடம் பேசிய தேமுதிகவுக்கு தோல்வியே மிஞ்சியது.
விஜய் அதிமுகவிற்கு நோ சொல்லியதால் தேமுதிக மீண்டும் இபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அதிக தொகுதிகளை கேட்க உள்ளதாகவும் தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 சட்டமன்ற தேர்தலில் இபிஎஸ் வெற்றி பெற வேண்டியது மிகவும் அவசியம் என்பதால் பிரேமலதாவின் நிபந்தனைகளுக்கு சம்மதம் தெரிவிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

