DMK TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டையே உலுக்கிய இந்த கோர விபத்திற்கு நரேந்திர மோடி, நிர்மலா சீதா ராமன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வந்தனர். ஆனால் இதற்கு காரணமான விஜய் அதனை கண்டு கொள்ளாமல் சென்றது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று நாட்கள் கழித்து விஜய் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த பதிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசி இருந்தார். இது அரசியல் ரீதியாக கவனத்தை பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடியோ கால் மூலம் ஆறுதல் தெரிவித்தார். குற்றம் புரியாதவர் நேரில் வராதது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் நேற்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தமிழக-ஆந்திர எல்லையோரம் அமைந்துள்ள மோர்தனா அணையை நேரில் ஆய்வு செய்த திமுக அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கரூர் கூட்ட நெரிசலில் பதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் தவெக தலைவர் விஜய் காணொளி மூலம் பேசி ஆறுதல் கூறுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன் குற்றம் புரியவில்லை என்றால், தைரியமாக அவருடைய தொண்டர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் சொல்லி இருக்க முடியும். தன்நெஞ்சே தன்னைச் சுடுகிற காரணத்தினால் வெளியில் வர பயம். எனவே தான் விஜய் காணொளி மூலம் பேசி வருகிறார், என்று கடுமையாக விமர்சித்தார். கரூர் விபத்திற்க்கு விஜய் தான் காரணம் என்று திமுக நிரூபிப்பதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், துரைமுருகனின் இந்த பேச்சு அதனை உறுதி செய்யும் வகையில் உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.