TVK: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களே ஆகியுள்ளது. கட்சி தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் விஜய் மக்களை சந்திக்காமல் சமூக ஊடகங்கள் மூலமாக மட்டுமே தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து வந்தார். இதனால் அவர் வொர்க் பிரம் ஹோம் தலைவர் என்று விமர்சிக்கப்பட்டார். இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக 2 மாபெரும் மாநாடுகளை நடத்தினார்.
பிறகு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் பிரச்சாரங்களை நடத்த போவதாக அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவரை பலரும் வீக் எண்ட் அரசியல் தலைவர் என்றும், இந்த பிரச்சாரம் பலனிக்காது என்றும் கூறி வந்தனர். இதனை கண்டு கொள்ளாத விஜய் தனது பயணத்தை தொடங்கினார். 5 இடங்களில் பிரச்சாரம் செய்த அவர், அதனையடுத்து கரூரில் பிரச்சாரம் செய்யும் போது, கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து எந்த கருத்தும் வெளியிடாத விஜய் 3 நாட்கள் கழித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில், வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதனை தொடர்ந்து அவர்களிடம் வீடியோ கால் மூலமாகவும் பேசினார். இந்நிலையில் அவர்களை நேரில் சந்திப்பதற்க்காக தமிழக டிஜிபிக்கு பாதுகாப்பு கோரி தவெக சார்பில் கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், பாதிக்கப்பட்டவர்களை பார்வையிடும் போது, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பாதுகாப்பு வீரர்கள் மட்டுமே உடனிருக்க வேண்டும் என்றும், திருச்சி விமான நிலையத்தின் உள்ளேயும், வெளியேயும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் போது மீடியாக்களுக்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.