ADMK DMDK: அதிமுகவின் தலைவராக இபிஎஸ் பதவி ஏற்றதிலிருந்தே அக்கட்சி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால் நடைபெறவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டுமென இபிஎஸ் கடுமையான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். அதன் ஒரு பகுதியாக தேசிய கட்சியான பாஜகவுடன் 1 வருடத்திற்கு முன்பே கூட்டணி அமைத்து விட்டார். தேர்தலில் வெல்ல பாஜக கூட்டணி மட்டும் போதாது என்று நினைத்த இபிஎஸ் பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
மேலும் புதிதாக உதயமாகியுள்ள கட்சியான தவெக உடனும் கூட்டணி குறித்து பேசி வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இதற்கு முட்டுகட்டை போடும் விதமாக தவெகவை சேர்ந்த நிர்மல்குமார், எங்கள் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லையென்று தெரிவித்தார். இவரின் இந்த பேச்சு விஜய்க்கு அதிமுக கூட்டணியில் இணையும் எண்ணம் சிறிதளவும் இல்லையென்பதை உணர்த்தியது. இதனால் அப்செட் ஆன இபிஎஸ் தன்னுடைய அடுத்த கட்ட முடிவை எடுத்து வைத்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியான நிலையில், அடுத்ததாக இபிஎஸ் தேமுதிகவிடம் மீண்டும் பேச உள்ளதாக தகவல் வந்துள்ளது.
கூட்டணி கட்சிகள் இல்லாமல் வெற்றி பெற முடியாது என்றுணர்ந்த இபிஎஸ், திமுக கூட்டணி பலம் பெறுவதை பார்த்து, தேமுதிகவும் அந்த கூட்டணிக்கு சென்று விடக்கூடாது என்பதில் தீர்க்கமாக உள்ளார். ராமதாஸ் ஏற்கனவே திமுக பக்கம் சாய்வதை அறிந்த அவர் பிரேமலதாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவது அதிமுக தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மிக பெரிய திராவிட கட்சியாக அறியப்பட்ட அதிமுக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மூன்றாம் நிலை கட்சிகளிடம் கையேந்தும் அவல நிலைக்கு வந்து விட்டதால், அதிமுக ஆதரவாளர்கள் விரக்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

