DMK TVK: தமிழகத்தில் தற்போது ஆளுங்கட்சியாக உள்ள திமுக 2026 தேர்தலிலும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. சென்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்த தொகுதிகளில் இந்த முறை அதிக கவனம் செலுத்துவதற்காக அங்கு முக்கிய அமைச்சர்களை நியமித்துள்ளது. மேலும் நான்கரை ஆண்டுகளில் செயல்படுத்திய திட்டங்களை மக்களுக்கு நினைவு கூறும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
பிரச்சார பயணத்தை குறைத்து கொண்ட திமுக, வெவ்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்றே சொல்லலாம். இத்தனை வருடங்கள் அதிமுகவிற்கு வலிமையான தலைமை இல்லாததை பயன்படுத்தி கொண்ட திமுகவிற்கு இந்த முறை அதிமுகவை மிஞ்சும் அளவிற்கு ஒரு அரசியல் கட்சி உருவெடுத்துள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் திமுகவை கடுமையாக எதிர்ப்பது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது. விஜய்யின் குறிக்கோள் திமுகவின் அதிருப்தி வாக்குகளை பிரிப்பது மற்றும் எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் கொங்கு மண்டல வாக்குகளை சேகரிப்பது தான்.
அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் பரப்புரை தொடங்கிய விஜய், அடுத்ததாக திமுக இத்தனை ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த சிறுபான்மையினரின் வாக்குகள் மற்றும் இளைஞர்கள், பெண்கள் வாக்குகளை பிரிக்க முயன்று வருகிறார். இதன் முதற்கட்டமாக தவெக தலைமையில் கிறிஸ்த்துவ சமத்துவ விழா நடைபெற்றது. இந்த விழாவில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க கிறிஸ்தவர்களின் வாக்குகளை சேகரிக்கும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது.
இந்நிலையில், சிறுபான்மையினரின் வாக்குகள் தவெக பக்கம் செல்லுமா என்று திமுக எம்.பி கனிமொழியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, யாருக்கு எந்த வாக்குகள் எப்படி போகும் என்பது தேர்தல் முடிவில் தெரியவரும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த பதில், இந்த முறை சிறுபான்மை வாக்குகள் விஜய்க்கு செல்லும் என்ற பயம் திமுகவுக்கு ஏற்பட்டுவிட்டது என்று பலரும் கூறுகின்றனர். திமுக சிறுபான்மையினரின் வாக்குகளை முழுமையாக நம்பியிருந்த சமயத்தில் விஜய்யின் இந்த செயல் திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது அவர்களின் பதிலில் நிரூபணமாகியுள்ளது.