
PMK TVK: பாமக நிறுவனர் ராமதாஸ் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவரை காண பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வந்து சென்றனர். நேரில் வர முடியாதவர்கள் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தனர். இந்நிலையில், பரிசோதனை முடிந்த அடுத்த நாளே ராமதாஸ் வீட்டிற்கு திரும்பினார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், அன்புமணி கூறிய கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.
மருத்துவர் ஐயா நல்லா தான் இருக்கிறார். ஆனால் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறி சிலர் என்னை வந்து பார்க்க சொல்கிறார்கள். ஐயாவை யார் யாரோ வந்து பார்த்து செல்கிறார்கள். அவர் என்ன காட்சிபொருளா என்றும், அவரின் உயிருக்கு ஏதாவது ஆபத்து வந்தால் அவருடன் இருப்பவர்களை சும்மா விட மாட்டேன் என்று கூறியிருந்தார். இதற்கு இன்று பதிலளித்த ராமதாஸ் படிக்காத மாடு மேய்க்கும் சின்ன பையன் கூட இப்படி பேச மாட்டான் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய அவர், என்னை காண பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த முன்னணி தலைவர்களும் வந்து சென்றனர்.
நேரில் வர முடியாதவர்கள் போனில் விசாரித்தனர். ஆனால் புதிதாக கட்சி தொடங்கிய யாரும் என்னை வந்து பார்க்கவோ, தொலைபேசி மூலமோ விசாரிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார். இவர் இவ்வாறு கூறியது, தவெக தலைவர் விஜய்யை தான் என்று பலரும் கூறி வருகின்றனர். விஜய் வந்து சந்திக்க வேண்டுமென்று ராமதாஸ் ஏன் நினைக்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வர, கூட்டணி குறித்து டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்தார்.