ADMK TVK: தமிழகத்தில் திராவிட கட்சிகளாக அறியப்படும் அதிமுகவும், திமுகவும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் திணறிப் போய் இருக்கிறது. திமுகவை தனது அரசியல் எதிரி என்று கூறிய விஜய், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் என்று சொல்லப்பட்டது. இதனை உறுதி செய்யும் வகையில், அதிமுக பரப்புரையில் தவெக கொடி பறந்ததை கண்ட இபிஎஸ் பிள்ளையார் சுழி போட்டாச்சு என்று கூறினார்.
ஆனால் தற்போது புதிய திருப்பமாக அதிமுகவை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாத விஜய், மறைமுகமாக அதிமுகவை வீழ்த்தும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும் தகவல் வந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அதிமுக பல்வேறு பிரிவுகளாக பிரிந்துள்ளதை சாதமாக விஜய் பயன்படுத்த நினைக்கிறாராம். இபிஎஸ் அதிமுக தலைவராக பதவியேற்ற பிறகு, சசிகலா. ஓபிஎஸ், டிடிவி தினகரன், தற்போது புதிதாக செங்கோட்டையன், சத்தியபாமா போன்ற பல்வேறு முக்கிய அதிமுக தலைவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இபிஎஸ் பதவி காலத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைக்கும் விஜய் தனது அடுத்த பிரச்சாரத்தில் அதிமுகவையும் குறிவைத்து பேசப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சியில் நிலவும் பிளவுகள், இரட்டை தலைமைப் பிரச்சினை, மற்றும் தலைமைக்கு எதிரான உட்கட்சி பூசல்கள் போன்றவை அதிமுகவின் பலவீனங்களாக பார்க்கப்படுகின்றன.
விஜய்யின் வருகை, கட்சியின் ஒற்றை இலக்கு வாக்குகளை மேலும் சிதறடித்து, அதிமுகவை மேலும் பலவீனப்படுத்தும் வாய்ப்பிருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் ஒரு முறை அதிமுக ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த புகழேந்தி, எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும், பிரிந்த கட்சியுடனும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் கட்சியுடன் கூட்டணி வைக்க விரும்ப மாட்டார்கள் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

