
TVK: கரூர் விபத்து ஏற்பட்டதிலிருந்தே தமிழக வெற்றிக் கழகம் வெளியில் தலை காட்டாமல் இருந்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை கூட நேரில் சென்று பார்க்காத தலைவர் விஜய் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பிறகு வீடியோ மூலம் ஆறுதல் கூறினார். இவரை தொடர்ந்து கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களும் இருக்குமிடம் தெரியாமல் தலைமறைவாகி இருந்தனர்.
இவர்களில் ஒருவரை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையெல்லாம் விட கட்சியில் தலைவருக்கு அடுத்த படியாக அனைத்து அதிகாரமும் உடைய கட்சியின் பொதுச்செயலாளரே தலைமறைவாகி இருப்பது தான் வேடிக்கையாக இருந்தது. விஜய் அரசியலுக்கு புதுசு என்பதால் இரண்டாம் கட்ட தலைவர்கள் தான் அவருக்கு அறிவுரை கூறி வழி நடத்த வேண்டும்.
ஆனால் அவர்களே இப்படி ஒளிந்திருப்பது சிரிப்பை வரவழைத்தது. ஆனால் ஆதவ் அர்ஜுனா அப்படி இல்லை. கரூர் சம்பத்திற்கு முன்பும் சரி பின்பும் சரி விஜய்யுடன் தான் நிற்கிறார். அவர் மீது கலவரத்தை தூண்டும் வகையில் கருத்தை வெளியிட்டதாக புகார்கள் எழுந்தாலும், தவெகவிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். ஆனால் புஸ்ஸி ஆனந்த் 20 நாட்களுக்கு பின் இப்போது தான் வெளியே வந்திருக்கிறார்.
இதனால் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆதவ் அர்ஜுனா தான் சரியாக இருப்பார் என விஜய் நினைப்பதாக தகவல் வந்துள்ளது. ஆனால் இதனை வேறு கோணத்திலிருந்து பார்த்தால் ஆதவ் அர்ஜுனா பொதுச்செயலாளர் ஆக வேண்டுமென திட்டமிட்டு செயல்படுவதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதனால் புஸ்ஸி ஆனந்த் தரப்பிற்கும், ஆதவ் அர்ஜுனா தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்து வருவது அவர்களின் சமூக வலைதள பக்கத்தின் மூலம் அறியமுடிகிறது.