TVK CONGRESS: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அனைவரும் காத்து கொண்டிருக்கும் வேலையில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. இம்முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, திமுக, என இருந்த தேர்தல் களம், தற்போது நாதக, தவெகவின் வருகையையும் எதிர்கொண்டுள்ளது. நாதகவை தவிர மற்ற மூன்று கட்சிகளும் கூட்டணி கணக்குகளை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை வருடங்களுக்கு மேலான நிலையில், இது அரசியல் அரங்கில் ஏகப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றே சொல்லலாம். விஜய்க்கு பெருகும் ஆதரவை கண்ட கட்சிகளனைத்தும் தவெக உடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
அதுமட்டுமில்லாமல் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று விஜய் கூறியதால், இந்த பேச்சுவார்த்தை மேலும் வலுபெற்றது. தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தபட்டாலும் கூட தவெக உடன் தற்போது வரை எந்த கூட்டணியும் உறுதியாகவில்லை. மாறாக அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை கேட்டு பெற விஜய்யை பகடை காயாக பயன்படுத்தி வந்தனர். இதனை முதலில் ஆரம்பித்தது விஜய்க்கு மிகவும் பழக்கப்பட்ட கட்சியான காங்கிரஸ் தான். அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்றவற்றை தராவிட்டால் விஜயுடன் கூட்டணி அமைக்கபடும் என்று திமுகவிடம் காங்கிரஸ் கூறி வந்த நிலையிலும் கூட திமுக தலைமை இதனை பரிசீலிக்கவில்லை.
இதன் காரணமாக தவெக-காங்கிரஸ் கூட்டணி கூடிய விரைவில் உறுதியாகும் என்று எண்ணப்பட்டது. காங்கிரஸின் சில செயல்பாடுகளும் இதனை உறுதிபடுத்தி இருந்தது. இவ்வாறான நிலையில் தவெக குறித்தும், விஜய் குறித்தும் காங்கிரஸ் எம்பி சசிகாந்த் கூறியுள்ள கருத்து கூட்டணி விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. தவெக கூட்டணி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, திமுக உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது சித்தாந்த ரீதியிலான கூட்டணி என்று கூறிய அவர், விஜய்யால் குறைந்த சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடியும், அவரால் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என்று கூறியுள்ளார். மேலும் விஜய் ஒரு தெளிவற்ற அரசியலை செய்து வருகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.