
TVK: திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி தற்போது சரிந்துள்ளது. இதற்கு கரூர் சம்பவம் முழு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கரூர் விபத்து நடந்ததிலிருந்தே தவெகவை சேர்ந்த யாரும் வெளியில் தலை காட்டாமல் இருந்தனர். மூன்று நாட்களுக்கு பிறகு தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.
இதனை தொடர்ந்து தவெவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கரூர் சம்பவம் தொடர்பாக, நேபாளம் போன்ற பகுதிகளில் நடந்தது போல தமிழ்நாட்டிலும் நடக்க வேண்டுமென கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டிருந்தார். இதனால் இவர் மீது ஏன் வழக்கு பதியப்படவில்லை என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் இவர் மீது வழக்கு பதியப்பட்டது.
இந்நிலையில் தவெக நிர்வாகிகள், சமூக வலை தளங்களில் எந்த கருத்தை பதிவிட்டாலும், அது ஏதாவது ஒரு வகையில் சர்ச்சைக்குரியதாகவும், கண்டத்துக்குரியதாகவும் மாறிவிடுகிறது. இதனால் தவெக தலைவர் விஜய் கரூர் சம்பவம் தொடர்பாகவும், கட்சி பற்றியும் தவெக செய்தி தொடர்பாளர்களை தவிர யாரும் பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.
கரூர் சம்பவம் தொடர்பாக கட்சி நிறைய சட்ட சிக்கல்களை சந்தித்து வருவதால் அனுபவம் இல்லாத கட்சி நிர்வாகிகள் பிரச்சனையை பெரிதாக்க கூடாது என்பதால் விஜய் இவ்வாறான உத்தரவை பிறப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனை மீறியும் யாராவது கருத்துக்களை பதிவிட்டு, அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டால் அவர்களுக்கு எந்த வகையிலும் கட்சி உதவி செய்யாது என்றும் கூறப்பட்டுள்ளது.