
TVK: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகையை பலரும் பலவிதமாக விமர்சித்து வந்தனர். விஜய் மக்களோடு மக்களாக கலந்து பேசவில்லை. இன்னும் அரசியல் புரியாதவராகவே இருக்கிறார் என்பது தான் பொதுவாக அனைவரும் விமர்சித்த கருத்து. இந்நிலையில், இயக்குநர் அமீர் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் அரசியல் நடத்தை குறித்தும், அவரின் அணுகுமுறையையும் கடுமையாக விமர்சித்தார்.
அமீர் பேட்டியின் போது, நான் பல முறை முதல்வர் ஸ்டாலினை விமானத்தில் சந்தித்திருக்கிறேன். ஆனால் விஜய் தனி விமானத்தில் தான் பயணம் செய்கிறீர்கள். அதுதான் பெரிய பிரச்சனை. நீங்கள் மக்களோடு கலந்துகொண்டு பயணித்தால் தான் மக்களின் விருப்பங்களை அறிய முடியும். அப்போது தான் உங்கள் பேச்சில் இந்த வார்த்தை வேண்டாம், இந்த கருத்து பொருந்தவில்லை என்று சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் நீங்கள் தனி விமானத்தில் பயணம் செய்து வந்து விடுகிறீர்கள்.
அப்படியானால், மக்களிடம் எப்போது உரையாட போகிறீர்கள்? எனக் கேட்டார். மேலும் அவர், விஜய் இரண்டு வருடங்களுக்கு முன் கட்சியைத் தொடங்கியிருந்தாலும், இதுவரை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பும் நடத்தவில்லை. ஒரு அரசியல் தலைவர் மக்களுடன் நேரடியாக உரையாட வேண்டும். பேச்சு வழியாகவே மக்களின் மனதை புரிந்துகொள்ள முடியும். ஆனால் விஜய்யின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது, எனவும் குற்றம்சாட்டினார்.
இந்த பேட்டி நடந்து கொண்டிருந்தபோது, அமீரின் பின்னால் கருப்பு சட்டை அணிந்திருந்த இளைஞர் ஒருவர் திடீரென தன் கையில் இருந்த விஜய் புகைப்படம் பதிக்கப்பட்ட கீச்செயினை கேமரா முன் காட்டி சிரித்தார். அந்த காட்சி செய்தியாளர் மத்தியிலும், பின்னர் சமூக வலைதளங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதனால் சமூக வலைதளங்களில் பலரும் தவெக ஆதரவாளர்களின் நடத்தை குறித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாற்றுக் கருத்து கொண்டவர்கள் பேசும் போது அவர்களை இப்படி கலாய்ப்பது ஜனநாயக மரியாதைக்கு எதிரானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிலர் அமீரின் பேச்சை எதிர்த்து விஜய்யின் முடிவுகளை நியாயப்படுத்தியிருக்க, சிலர் அவரின் விமர்சனத்தில் உண்மை இருக்கிறது எனவும் கூறி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில், இயக்குநர் அமீர் கூறிய பேச்சும், பின்னணியில் நடந்த கீச்செயின் சம்பவமும், விஜய்யின் அரசியல் பயணத்தைச் சுற்றி புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.