TVK BJP DMK: தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் அரசியல் வருகை ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, அவர் தனியாகவே தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இந்த முடிவு, திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்கும் சூழலை உருவாக்கும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன. முந்தைய தேர்தல்களில், திமுகவுக்கு எதிரான வாக்குகள் பெரும்பாலும் அதிமுக கூட்டணிக்கு சென்றன.
ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அதிமுகவின் உட்கட்சி பிளவு, ஓபிஎஸ், இபிஎஸ் பிரிவு, டிடிவி தினகரன் மற்றும் செங்கோட்டையன் போன்ற தலைவர்களின் தனி அணிகள் ஆகியவை எதிர்ப்பு வாக்குகளை பலவீனப்படுத்தி உள்ளன. இந்நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நேரடியாக தேர்தலில் இறங்கினால், அந்த வாக்குகளை அவரும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில், இது பாஜகவுக்கு மறைமுகமாக நன்மை தரக்கூடியதாக கருதப்படுகிறது.
காரணம், திமுக எதிர்ப்பு வாக்குகள் பல திசைகளில் பிளந்தால், பாஜக தனது வாக்கு வங்கியை உறுதிப்படுத்தி சில முக்கிய தொகுதிகளில் முன்னிலை பெறலாம் என்ற நம்பிக்கை அக்கட்சியில் நிலவுகிறது. மேலும், பாஜக ஏற்கனவே மூன்றாவது சக்தி என தன்னை நிலைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் விஜய் தனித்து நிற்பது அந்த அரசியல் யோசனைக்கு இணங்கும் வகையில் இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். அதனால், விஜய்யின் தனித்துப் போட்டியிடும் தீர்மானம், திமுக, அதிமுகவுக்கு சவாலாகவும், பாஜகவிற்கு மறைமுக ஆதரவாகவும் மாறக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

