TVK: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 1 வருடத்திற்கு மேலான நிலையில், 2 மாபெரும் மாநாடுகளையும், 5 மாவட்டங்களில் சுற்றுப்பயணமும் நிறைவு பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது கூட்ட நெரிசலில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிகழ்வு திமுகவின் கோட்டையாக கருதப்படும், கரூரில் நடைபெற்றதால், தவெக நிர்வாகிகள் தொடங்கி எதிர்க்கட்சிகள் வரை அனைவரும், இது திமுக அரசின் சதி என்று கூறி வந்தனர்.
ஆனால் திமுக தொண்டர்கள் இதனை தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் அறியாமை என்று விமர்சித்து வந்தனர். மேலும் பல்வேறு மூத்த பத்திரிகையாளர்கள் அளித்த பேட்டியில், விஜய் ரோடு ஷோ நடத்தி வந்தது தான் காரணம் என்று கூறினார்கள். நடிகர் விஜய் என்னதான் அரசியலில் கால் பதித்திருந்தாலும், அவர் ஒரு பிரபல நடிகர். அதனால் அவரை அரசியல் தலைவர் என்று மக்கள் உணர இன்னும் நேரமெடுக்கும். கரூருக்கு வந்த கூட்டமும் அப்படித்தான்.
அவரை அரசியல் தலைவராக மக்கள் பார்க்கவில்லை.ஒரு நடிகராகவே பார்த்தனர். அதனால் தான் அவ்வளவு கூட்ட நெரிசல், தள்ளு முள்ளு, உயிரிழப்புகள் போன்றவை அரங்கேறியுள்ளது. சம்பவம் நடந்த பிறகு வெளியே தலை காட்டாமல் இருந்த விஜய், இத்தனை இழப்புகளுக்கு காரணம் என்னவென்று கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அந்த ஆலோசனையில், மக்கள் இன்னும் உங்களை அரசியல் தலைவனாக ஏற்கவில்லை என்றும், அவர்கள் மனதில் இந்த கருத்து பதியும் வரையில், நீங்கள் ரோடு ஷோ நடத்துவதை தவிர்த்தல் நல்லது என்றும் அறிவுரை கூறப்பட்டிருக்கிறது. இதனால் விஜய், இனிமேல் நடக்கும் பரப்புரைகளில் ஹெலிகாகாப்டரில் வந்து இறங்கி, கூட்டம் முடிந்ததும், அதே விமானத்தில் திரும்ப சென்று விடுவதாக முடிவெடுத்துள்ளாராம். விஜய்யின் இந்த முடிவு ஜெயலலிதா பாணியை பின்பற்றுவது போல அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.