TVK NTK: சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கட்சிகளனைத்தும் மக்களை சந்திக்கும் பணி, தேர்தல் வியூகங்கள், கூட்டணி கணக்குகள், தொகுதி பங்கீடு குறித்து பேச ஆரம்பித்து விட்டன. மேலும் இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவும் என்பது தெளிவாகிவிட்டது. அதிமுகவும், திமுகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வரும் வேலையில், நாதக மட்டும் இதுவரை தனித்து நின்று போட்டியிட்டு வருகிறது. புதிதாக உதயமான விஜய்யின் தவெகவும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்று கூறியுள்ளதே தவிர இதுநாள் வரை எந்த கட்சியுடனும் கூட்டணியை உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் தான் விஜய் மக்களை சந்திக்கும் பணியில் தீவிரம் காட்டி உள்ளார். 5 இடங்களில் பிரச்சார பயணத்தை முடித்த இவர், கரூரில் பரப்புரை மேற்கொள்ளும் போது, எதிர்பாராத விதமாக பல உயிரிழப்புகள் ஏற்பட்டுவிட்டன. இதன் பின்னர் 1 மாதம் முடங்கி இருந்த விஜய் புதுவையில் தனது அடுத்த கட்ட மக்கள் சந்திப்பை தொடங்கினார். இதனை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு, ஈரோட்டில் மக்களை சந்தித்து பேசிய விஜய், வழக்கம் போல திமுகவை விமர்சித்து விட்டு, களத்தில் இல்லாதவர்களை பற்றியெல்லாம் விமர்சிக்க முடியாது.
எங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது என்று, அதிமுக-வையும், நாதக-வையும் மறைமுகமாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடியாக பேசிய சீமான் விஜய் களத்திற்கே வராதவர் களத்தில் இல்லாதவர்களை பற்றி பேசுகிறார். அவரின் பேச்சை சிரித்து விட்டு கடந்து செல்ல வேண்டும் என கூறியுள்ளார். சீமானின் இந்த கருத்து, தவெகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக விஜய்க்கும், சீமானுக்கும் மோதல் போக்கு பெரிதாகி கொண்டே செல்வதை காண முடிகிறது.