TVK: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம், தமிழக மக்களுக்கு விஜய் கடிதம்.
கடந்த டிசம்பர்-23 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டு இருக்கும் குணசேகரன் என்பவர் திமுக கட்சியின் நிர்வாகியாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமையை கண்டித்து தமிழகம் முழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையடி போராட்டத்தை நடத்தி திமுக அரசை வன்மையாக கண்டித்து இருந்தார். அதிமுகவினர் போஸ்டர் ஒட்டி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக மக்களுக்கு தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
அதில், அன்புத் தங்கைகளே! எனத் தொடங்கும் வாசகத்தில் தொடங்கி தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைத்து தரப்பு மக்களுக்கு எதிராக நடக்கும் சமூக சீர்கேடு, பாலியல் வன்கொடுமைகளை கண்டு தான் வேதனைக்கு ஆளாகிறேன் என்றும். யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? என்று கேள்வி எழுப்பியும் இருந்தார்.
மேலும், நம்மை ஆளும் ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை என்பதால் நான் கடிதம் எழுதி இருக்கிறேன் எனக் கூறி இருக்கிறார். எப்போதும் உங்களுக்கு ஆதரவாக அரணாக நிற்போன். பாதுகாப்பான தமிழகத்தை படைக்க நாம் அனைவரும் இணைந்து விரைவில் செயல் படுவோம் எனத் தெரிவித்து இருக்கிறார்.