DMK TVK: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக தேர்தல் ஆணையம் தொடங்கி கட்சியின் அடிமட்ட தொண்டன் வரை அனைவரும் அயராது உழைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் அரசியல் அரங்கை அதிர வைக்கும் வகையில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் முதலிடம் பிடிப்பது நடிகர் விஜய்யின் அரசியல் வருகை என்றே கூறலாம். விஜய், ஆரம்பத்திலிருந்தே திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் கூறி வருகிறார். ஆனால் பாஜகவை விட திமுகவையே கடுமையாக தாக்கி வந்தார்.
இதனால் திமுகவின் இளைஞர் வாக்குகளும், அதிருப்தி வாக்குகளும் விஜய் பக்கம் செல்ல நேரிடும் என்று கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுகவின் முக்கிய முகங்களை தவெக பக்கம் இழுக்கும் பணியை மும்முரமாக செய்து வரும் விஜய், அடுத்ததாக திமுகவின் டாப் தலைகளை தம் பக்கம் சேர்க்கும் பணியையும் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. அந்த வகையில் திமுகவை தீய சக்தி என்று கூறி வரும் விஜய், திமுக எம்பி கனிமொழிக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கனிமொழி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட விஜய், அவருக்கு வாழ்த்து கூறியிருப்பது பேசு பொருளாகியுள்ளது. கனிமொழிக்கு அண்மை காலமாகவே திமுகவில் உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் தவெகவின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனாவும் திமுகவின் சிட்டிங் அமைச்சர்கள் சிலர் தவெகவுக்கு வரவுள்ளனர் என்று கூறி பகீர் கிளப்பினார். இதன் காரணமாக கனிமொழி தவெகவுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.