PMK TVK: 2026 யில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனை உச்சத்தை எட்டியுள்ளது. அன்புமணியை தலைவர் பதவியிலிருந்து ராமதாஸ் நீக்க, தேர்தல் ஆணையமோ அன்புமணி தான் தலைவர் மற்றும் சின்னத்திற்கு உரியவர் என்று தீர்ப்பளித்தது. இந்த விவகாரம் டெல்லி வரை செல்ல தேர்தல் நெருங்கும் சமயத்தில் வேட்பு மனுவில் யார் கையெழுத்திடுவது என்ற பிரச்சனை வரும், அதனால் பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.
இவ்வாறான நிலையில் தான் நேற்று ராமதாஸ் தலைமையில் சேலத்தில் பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அன்புமணியின் பதவி காலம் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. இதனால் புதிய தலைவராக ஒரு மனதாக ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், பசுமை தாயக அமைப்பின் தலைவராக இருந்த சௌமியா அன்புமணியின் பதவி பறிக்கப்பட்டது. இப்படியான சுழலில் பாமகவின் கூட்டணி யாருடன் என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இந்த கேள்விக்கு செயல் தலைவர் காந்திமதி தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பொதுக்குழுவில் பேசிய காந்திமதி, அன்புமணி ஆர்.எஸ்.எஸ்-யின் அடிமை என்று விமர்சித்ததுடன், ஆட்சியில் பங்கு வேண்டும் 25 எம்எல்ஏக்களுடன் சட்டசபைக்கு செல்வோம் என்று கூறியுள்ளார். இவர் பாஜகவை விமர்சித்தன் மூலம் அதிமுக-பாஜக கூட்டணிக்கு செல்ல மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது. மேலும் ஆட்சி பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திமுக கூறி வருவதால் திமுக உடன் இணைவதற்கும் வாய்ப்பில்லை என்பது தெளிவாகியுள்ளது. இதனால் விஜய் ஆட்சியில் பங்கு தருவதாக கூறியதன் காரணமாக ராமதாஸ் தரப்பு தவெக கூட்டணிக்கு மறைமுகமாக சம்மதம் தெரிவித்ததாகவே பார்க்கப்படுகிறது.