
DMK VSK BJP: சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகத்திலுள்ள கட்சிகள் அனைத்தும் அயராது உழைத்து வருகிறது. ஆளுங்கட்சியாக உள்ள திமுகவும் அதன் பணிகளை செய்து வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் திமுகவிற்கு எதிரான பலமான கட்சியாக உருவெடுத்துள்ளது. தவெகவை சமாளிப்பதே திமுகவிற்கு பெரும்பாடாக உள்ள நிலையில் தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் தலைமையிடம் அதிக தொகுதிகள், ஆட்சி பங்கு போன்ற பல்வேறு நிபந்தனைகளை முன் வைப்பதை தொடர்ந்து பார்க்க முடிகிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு தலைவர்களும் அதிக தொகுதிகளை கேட்பது மட்டுமல்லாமல், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று கூறி வரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தற்போது ஆட்சியில் பங்கை வெளிப்படையாக கேட்டு வருகிறது. விசிகவின் தலைவர் திருமாவளவன், எங்களுக்கு கூட்டணியில் இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கபட்டிருப்பதாக கூறியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது புதிதாக விசிகவின் நிர்வாகி சங்கத்தமிழன், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எந்த சதி வேலைகளையும் செய்வோம், சென்ற தேர்தலில் 6 சீட்டுகள் கொடுத்தோம் இந்த தேர்தலிலும், அதையே கொடுத்து விடலாம் என்று கனவு காணாதீர்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் கடைசி தொண்டன் இருக்கும் வரை ஆட்சி அதிகாரத்தை நோக்கி ஓடுவோம் என்று தெரிவித்திருக்கிறார். இவரின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் வேளையில், இவர்களின் இந்த தொடர் வலியுறுத்தலுக்கு பின்னால் பாஜகவின் சதி திட்டம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் பாஜகவின் மூத்த மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஸ்டாலின் சமூக நீதியை பின்பற்றுபவராக இருந்தால், நீண்ட காலமாக திமுக கூட்டணியிலிருக்கும் திருமாவளவனுக்கு மீதமிருக்கும் 6 மாத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அது மட்டுமல்லாமல், நயினார் நாகேந்திரன் சமூக நீதியை பின்பற்றாத கட்சியுடன் திருமாவளவன் ஏன் தொடர்கிறார் என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இவர்களின் தூண்டுதல் காரணமாக தான் விசிக இவ்வாறான கோரிக்கையை முன் வைக்கிறது என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
