பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்..!! பூஜை பொருட்களை கையாளும் முறைகள்..!!

Photo of author

By Janani

பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாகவும், நறுமணத்துடனும் வைத்துக் கொள்வதற்கான வழிமுறைகள்..!! பூஜை பொருட்களை கையாளும் முறைகள்..!!

Janani

Updated on:

நம் அன்றாட பணிகளில் பூஜை அறையை சுத்தம் செய்வது என்பது மிகப்பெரிய வேலையாக இருக்கக்கூடும். இந்த சவாலான வேலையை சுலபமாக செய்யக்கூடிய வகையிலான குறிப்புகளை தான் தற்போது காணப் போகிறோம்.

எல்லா அறைகளை காட்டிலும் பூஜை அறை தெய்வீக மணம் கமலும் படி வைத்திருந்தால் மகாலட்சுமி ஆனவள் நம்மை விட்டு எங்கும் செல்லாமல் நம்முடனேயே நிரந்தரமாக வாசம் செய்வாள்.

1. பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு நீங்கள் வைக்கும் பொட்டு மஞ்சளை குறைத்து வைக்காமல்,சந்தனம் குழைத்து வைத்தால் நீண்ட நாள் வரை அழியாமல், உதிராமல் இருக்கும்.சந்தனத்தை சிறிதளவு பன்னீர் ஊற்றி,ஜவ்வாது அல்லது தசாங்கம் பவ்டர் கலந்து உபயோகித்தால் இன்னும் வாசனையாக இருக்கும்.

2. பூஜை அறையில் விளக்கு ஏற்ற பயன்படுத்தும் எண்ணெய் எப்போதும் நல்லெண்ணையாக இருப்பது நல்லது. இந்த நல்லெண்ணெயுடன் ஜவ்வாது அல்லது தசாங்கு பவுடரை கலந்து வைத்துக் கொண்டால் ஒவ்வொரு முறை விளக்கேற்றும் பொழுதும் தெய்வீக மணம் வீசும். தசாங்கு பவுடர் என்பது நாட்டு மருந்து கடை அல்லது பூஜை பொருட்கள் விற்கக் கூடிய கடைகளில் எளிதாக கிடைக்கக் கூடிய ஒன்று.

3. மஞ்சள் மற்றும் குங்குமத்தை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து வைப்பதை விட கண்ணாடி பாட்டில்களில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு கட்டி தட்டாமல் பூச்சி, புழுக்கள் வராமல் அப்படியே பிரஷ்ஷாக இருக்கும். அதில் சிறிதளவு பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டுக் கொள்ளுங்கள். நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.

4. விசேஷ நாட்களில் பூஜை அறையில் கோலம் போட கோலமாவு பயன்படுத்துவதை விட, அரிசி மாவை கரைத்து அதில் கோலம் போட்டால் நீண்ட நேரம் கலையாமல், பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கும். மூன்று பங்கு அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்து அரைத்துப் போட்டால் கோலம் பளிச்சென்று இருக்கும்.

5. பூஜைக்கு உரிய பொருட்களை எல்லாம் தனித்தனியாக வைத்துக் கொள்வதை விட, நாம் சமையலறையில் பயன்படுத்தும் அஞ்சறை பெட்டியை புதிதாக வாங்கி அதன் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு பொருட்களையும் போட்டு வைத்துக் கொண்டால் போதும். மஞ்சள், குங்குமம், கற்பூரம், சந்தனம், திரி, வத்திப்பட்டி என நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பொருட்களை அழகாக வைத்துக் கொள்ளலாம்.

6. வாரத்திற்கு ஒரு முறையாவது சாம்பிராணி தூபம் போட்டு வீடு முழுவதும் காண்பிப்பது என்பது நேர்மறை ஆற்றல்களை உருவாக்கும் என்பது ஐதீகம். அப்படி சாம்பிராணி போடும் பொழுது அதனுடன் வெட்டிவேர் மற்றும் தசாங்கம் பவுடரை சேர்த்துக் கொள்ளுங்கள். இது நம்முடைய சிந்தனையை தெளிவாக்கும். தீய வழிகளில் நமது மனம் செல்லாமல் ஆன்மீக வழியில் செல்ல உதவும்.

7. பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களை சுத்தம் செய்யும் பொழுது காட்டன் துணியில் நீங்கள் பயன்படுத்தும் ஹேண்ட் வாஷ் லிக்யூடை கொஞ்சமாக ஊற்றி துடைத்தால் நொடியில் பளபளப்பாக மாறி, வேலையும் எளிதாகி விடும்.

8. பூஜை அறையில் இருக்கும் பூஜை பொருட்களை சுத்தம் செய்யும் பொழுது அதில் இருக்கும் எண்ணெய் பசை எளிதாக நீங்க சிறிது ஹேண்ட் வாஷ் அல்லது வாஷிங் லிக்யூட் விட்டு தேங்காய் நார் கொண்டு லேசாக துடைத்தால் போதும். கொஞ்சம் கூட எண்ணெய் பிசுக்கு இல்லாமல் பளபளவென இருக்கும். அதன் பிறகு நீங்கள் எப்போதும் போல சுத்தம் செய்து கொள்ளலாம்.

9. உங்கள் பூஜை அறையில் வைத்திருக்கும் பஞ்ச பாத்திரத் தண்ணீரில் சிறிதளவு பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு, நான்கு அல்லது ஐந்து துளசி இலைகள் ஆகியவற்றை சேர்த்து வைத்தால் கோவில்களில் கொடுக்கும் தீர்த்தம் தயாராகிவிடும். பூஜை முடிந்ததும் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் அதிலிருந்து தீர்த்தம் கொடுக்க தீராத நோயும் குணமாகும்.

10. கற்பூரம் கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்றவற்றை ஏற்றும்பொழுது அந்த கற்பூரத் தட்டில் சிறிய அகல் விளக்கு ஒன்றை வைத்து ஏற்ற கருப்பு படியாமல், சுத்தம் செய்வதற்கு எளிதாக இருக்கும். மேலும் சாம்பிராணி கட்டியை தண்ணீரில் நனைத்து விட்டு பின்பு கற்பூரத்தை வைத்து ஏற்ற நீண்ட நேரம் நின்று எரியும். மேலும் வாசனையும் அதிகரித்து வரும்.

11. கற்பூர டப்பாவில் இருக்கும் கற்பூரம் விரைவில் கரைந்து விடுகிறது என்றால், அதில் நாலைந்து மிளகுகளை போட்டு வைத்தால் கற்பூரம் கரையாமல் இருக்கும்.

12. பூஜை அறையில் ஊதுபத்தியை ஏற்றும்பொழுது நீண்ட நேரம் எரிய வேண்டும் என்றால் ஊதுபத்தியின் முனையை மட்டும் விட்டு, மற்ற பகுதிகளில் சிறிதளவு தண்ணீரை தடவி விட்டு ஏற்றினால் நீண்ட நேரம் ஊதுபத்தி மணமுடன் எரியும்.

13. மஞ்சள் மற்றும் குங்குமம் பூஜை அறையில் வைக்கும் பொழுது அந்த டப்பாவில் ஒரு கற்பூரம் போட்டு வையுங்கள். எவ்வளவு நாட்கள் ஆனாலும் அதில் பூஞ்சைகள் பிடிக்காது, நமத்து போகவும் செய்யாது.

14. பூஜை அறையில் எப்பொழுதும் மயிலிறகை வைத்திருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு குறையும். மேலும் குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இருக்க, பூஜை அறையில் உங்கள் குலதெய்வத்திற்கு மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயத்தை முடிந்து வையுங்கள். ஒவ்வொரு முறையும் உங்கள் குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது அதை காணிக்கையாக கொடுங்கள்.

15. பூஜை அறையை துடைக்கும் பொழுது அந்த தண்ணீரில் சிறிதளவு கற்பூரத்தை நுனிக்கு போட்டு துடைத்தால் எந்த ஒரு பூச்சிகளும், எறும்புகளும் வராமல் இருக்கும். பூஜை அறையும் தெய்வீக மணமாக இருக்கும்.