BJP TVK: தமிழகத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. முன்னணி கட்சிகள் அனைத்தும் மக்களை சந்திக்கும் பணிகளிலும், கூட்டணி வியூகங்களிலும் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளன. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டு, ஒன்றரை வயதை எட்டிய நிலையில் அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய்கான வரவேற்பை பயன்படுத்த நினைத்த அதிமுகவும் பாஜகவும் அவரை கூட்டணியில் சேர்த்து திமுகவை வீழ்த்தி ஆட்சி கட்டிலில் அமர்ந்து விடலாம் என்று திட்டம் தீட்டியது.
ஆனால் விஜய் இவர்கள் கூட்டணிக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. கரூர் சம்பவத்தில் விஜய்யின் குரலாக ஒலித்த இரண்டு கட்சிகளுக்கும் ஏமாற்றத்தை பரிசளிக்கும் வகையில், தவெகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தவெக தலைமையில் கூட்டணி, விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிமுகவும், பாஜகவும் விஜய்யை நேரடியாக விமர்சிக்க தொடங்கிவிட்டன. நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, 10% வாக்கு கூட இல்லாத கட்சி தவெக என்று கூறியிருந்தார்.
இவரை தொடர்ந்து தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தவெகவை கடுமையாக தாக்கியுள்ளார். தேர்தலின் போது கூட்டத்தை கூட்டி விடலாம், ஆனால் ஆட்சிக்கு வர வேண்டுமென்றால் மக்களின் நன்மதிப்பை பெற வேண்டும். கவுன்சிலர் கூட இல்லாத தவெகவில் திமுகவிற்கும் தவெகவிற்கும் தான் போட்டி என்று கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது என்று அவர் கூறினார்.
மேலும் கரூர் சம்பவத்தில் விஜய் இடத்தில் யார் இருந்திருந்தாலும் அவர்களுக்கும் பாஜக ஆதரவு அளித்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இவரின் இந்த கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய்க்கு எந்த கட்சியும் ஆதரவு தெரிவிக்காத சமயத்தில், அவருக்கு ஆதரவாகவும், தவெகவின் குரலாகவும் ஒலித்தது அதிமுகவும், பாஜகவும் மட்டும் தான். தற்போது அதுவும் விஜய்க்கு எதிராக மாறிவிட்டது. உலகிலேயே பெரிய கட்சியான பாஜகவும், மிகப்பெரிய திராவிட கட்சியான அதிமுகவும் ஒருசேர தவெகவை எதிர்த்தால் விஜய் அதனை எப்படி சமாளிப்பார் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

