DMK VCK: அடுத்த வருடம் நடக்கப்போகும் தேர்தலுக்காக இப்போதிலிருந்தே தேர்தல் களம் தயாராகி கொண்டிருக்கிறது. இந்த முறை அதிமுக, திமுக, நாதக, தவெக என நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சியாக உள்ள திமுக இந்த முறையும் வெற்றி பெற வேண்டுமென பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. இதற்காக தனது கூட்டணி கட்சிகளிடமும் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான சூழலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வகித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவிற்கு எதிராக சில கருத்துக்களை மறைமுகமாக கூறியுள்ளதாக தெரிகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே திமுக கூட்டணியில் இருந்து வரும் விசிக, தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து ஸ்டாலினிடம் பல்வேறு நிபந்தனைகளை முன் வைத்து வருகிறது. அதில் முக்கியமானது அதிக தொகுதிகள் என்பதே ஆகும். இந்நிலையில் மதவெறி அரசியலை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய திருமாவளவன், திமுக-வுக்காக வாதாட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
எங்களுக்கென சில கொள்கைகள் உள்ளன. கொள்கைகளுக்கென சில தோழமைகள் உள்ளன. எங்கள் அரசியலை பேசுவதால் தான் திமுக உடன் கூட்டணி வைத்துள்ளோமே தவிர வேறு காரணங்கள் கிடையாது என்று பேசியுள்ளார். இவரின் இந்த கருத்து, திமுக கூட்டணியில் விசிக இருந்தாலும் அவர்களுக்காக விசிக குரல் கொடுக்காது என்பதை நிரூபித்துள்ளது. திருமாவின் கருத்தால் கூட்டணியில் சலசலப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகளவில் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.