DMK VCK: சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் 5, 6 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் வேகமெடுத்துள்ளது. இதற்கு மேலும் மேலும் தீனி போடும் வகையில் அமைந்தது தான் விஜய்யின் அரசியல் வருகை, SIR பணிகள், திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார், அதிமுகவில் ஏற்பட்ட பிளவு போன்றவையாகும். அதிமுக பல்வேறு அணியாக பிரிந்தது அனைத்து ஊடகங்களிலும் விவாதிக்கப்பட்டு வரும் வேலையில், திமுகவின் கூட்டணி ஒற்றுமையாக இருக்கிறது என்று அனைவரும் நினைத்து வந்தனர். ஆனால் தேர்தல் நெருங்கும் சமயம் பார்த்து திமுக கூட்டணி கட்சிகள் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன.
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்டு வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது. இதனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் திணறும் ஸ்டாலினுக்கு தற்போது புதிதாக விசிகவும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து வருகிறது. இது குறித்து விசிகவின் நிர்வாகி சங்கத்தமிழன் ஆட்சியில் பங்கிற்காக நாங்கள் எந்த வேலையையும் செய்வோம், என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது விசிகவின் தலைவரான திருமாவளவனும் இது குறித்து பொதுவெளியில் பேசியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக பேசிய அவர், 2026 தேர்தலில் ஆட்சி பங்கு என்பது எங்களுடைய கோரிக்கையாக இருக்காது. அதற்காக இந்த கோரிக்கையை கைவிட போவதும் கிடையாது என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து, திமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் திமுகவிற்கு அடுத்த இரண்டாவது பெரிய கட்சி மற்றும், மக்கள் செல்வாக்குள்ள ஒரு கட்சி என்றால் அது விசிக தான். அப்படி இருக்க விசிகவின் இந்த கோரிக்கையை ஸ்டாலின் ஏற்க மறுத்தால் திருமாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

