நமது வீடானது லட்சுமி கடாட்சமாக இருக்கவும், பணமும் புகழும் நம்மிடம் நிலைத்து இருக்கவும் வேண்டும் எனில் நமது வீட்டின் நிலை வாசல் தான் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சிலர் வாடகை வீடுகளில் வசிக்கும் பொழுது கூட நல்ல நிம்மதியுடனும், பணம் வரவுகளுடனும் இருந்திருப்பர். ஆனால் அவர்கள் தனக்கென ஒரு சொந்த வீட்டினை கட்டி வாழும் பொழுது அந்த நிம்மதியும், சந்தோஷமும் இருக்காது. அதற்கான காரணம் அவர்களது வீட்டின் நிலை வாசல் தான்.
நாம் வசிக்கக்கூடிய வீட்டின் நிலை வாசலானது எவ்வாறு இருக்க வேண்டும்? அதில் ஏதேனும் தவறு செய்திருக்கிறோமா! என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள இந்த பதிவினை பாருங்கள். ஒரு வீட்டின் நிம்மதியும் சந்தோஷமும் மற்றும் லட்சுமி கடாட்சமாக விளங்கவும் அந்த வீட்டின் நிலை வாசலில் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலை வாசலை எவ்வாறு வைத்துக் கொள்வது என்பது குறித்து காண்போம்.
வீட்டின் நிலை வாசல் கதவுகளை அலங்கரிப்பதை அனைவரும் விரும்புவர். இதனால் நிலை வாசல் கதவில் நமக்கு விருப்பமான கடவுளின் படத்தை பதித்து வைப்போம். உதாரணமாக பிள்ளையார், வரலட்சுமி, முருகன் போன்றவற்றை நம் நிலை வாசலில் பதித்து வைப்போம்.
நிலைவாசல் கதவு ஆனது முன்னும் பின்னும் என நாம் திறக்கும் போதெல்லாம் ஆடிக் கொண்டே இருக்கும். அப்பொழுது அந்த கதவில் நாம் வரைந்து வைத்துள்ள கடவுள் படமும் ஆட்டம் கண்டு விடும். இதனால் தீராத மன கஷ்டங்களும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும். எனவே நிலை வாசல் கதவில் சாமி படங்களை பதிக்க கூடாது.
சாமி படங்களை நிலை வாசல் சட்டங்களில் பதிக்கலாமே தவிர கதவுகளில் பதிக்க கூடாது. அதேபோன்று கதவுகளில் சாமி படங்களை ஒட்டவும் கூடாது. இதற்கு பதிலாக நாம் நமது நிலை வாசலை அலங்கரிக்க ஸ்வஸ்திக் மற்றும் ஓம் சின்னங்களை பயன்படுத்தலாம். இது மிகவும் அதிர்ஷ்டத்தை தரும்.
மயில், அன்னப்பறவை, பசுவும் கன்றும், பூக்கள் மற்றும் யானை படம் போன்றவற்றை நமது வீட்டில் நிலை வாசலில் வைக்கலாம். சாமி படங்களை கதவில் பதித்து வைத்தவர்கள் ஒரு சிலருக்கு அது நல்ல வாஸ்து ஆக அமைந்து விடும். ஆனால் ஒரு சிலருக்கு கஷ்டம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது அதே சமயம் நிலை வாசலில் சாமி படம் உள்ளது என இருப்பவர்கள் இந்த தவறினை சரி செய்து கொள்வது நல்லது.
ஏனென்றால் நமது வீட்டின் நிலை வாசல் தான் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுதான் பிரதான வாயிலாகவும் திகழ்கிறது. நமது வீட்டின் பூஜை அறைக்கு ஈடாக நமது வீட்டின் நிலை வாசலுக்கு தான் பூஜை செய்வோம். நிலை வாசலில் தெய்வம் குடியிருப்பதாகவும் ஐதீகம் உள்ளது. எனவே செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் தலைவாசலுக்கும் பூஜை செய்வது சிறப்பை தரும்.
நிலை வாசலில் தெய்வம் வசிப்பதால் தான் நாம் வெளியில் செல்லும் பொழுது கடவுளின் முன்னெச்சரிக்கையாக சில சமயங்களில் நிலை வாசலில் கால் தடுமாற்றம் ஏற்படும். அப்பொழுது சிறிது நேரம் அமர்ந்து பின்பு செல்ல வேண்டும் என்று நமது முன்னோர்கள் கூறுவார்கள். சிறிது நேரம் கழித்து வெளியில் செல்லும்போது நமக்கு வர இருந்த பிரச்சனைகள் விலகிச் செல்லும் என்பதும் ஐதீகம்.
நிலைவாசல் கதவில் எந்தவித சத்தமும் வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று நிலை வாசலில் நின்று கொண்டு யாருக்கும் எந்த ஒரு பொருளையும் தரக்கூடாது. ஒன்று உள்ளே நின்று தர வேண்டும் இல்லையென்றால் வெளியில் வந்து தர வேண்டும்.
நிலைவாசலில் தெய்வங்கள் குடியிருப்பதால் தான் நமது முன்னோர்கள் நிலை வாசலுக்கு மஞ்சள் குங்குமம் வைப்பது, விளக்கு ஏற்றுவது போன்ற வழிபாடுகளை செய்து வந்தனர். இவ்வாறு செய்வது நமது வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் ஆகவும், வீட்டில் நிம்மதி மற்றும் சந்தோஷம் ஏற்படவும் வழி வகுத்து தரும்.