MDMK DMK: அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. எப்போதும் போலில்லாமல் இந்த முறை தேர்தல் களம் புதிய வேகத்தை எட்டியுள்ளது. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ள போதிலும், முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, ஆளுங்கட்சியை நிலவும் உட்கட்சி பிரச்சனையும், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீதான ஊழல் புகாரும் தான். இந்த முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென என பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் வகையில் அமைந்தது தான் அமைச்சர்கள் மீதான புகார்.
இதனால் தங்களை நிரூபிக்க அமைச்சர்கள் முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு திமுகவின் உள்ளகத்தில் சச்சரவு அதிகரித்து கொண்டே இருக்கும் நிலையில், தற்போது புதிதாக திமுக கூட்டணியில் பல வருடங்களாக பயணித்து வரும் மதிமுக 2026 சட்டமன்ற தேர்தலில் சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய மதிமுகவின் முதன்மை செயலாளரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ, சட்டமன்ற தேர்தலில் எங்களுக்கான அங்கீகாரம் வேண்டும் என்று தலைமையிடம் கேட்டுள்ளோம் என்று கூறிய அவர், எல்லா இயக்கங்களுக்கும் தனிப்பட்ட முறையில் சின்னம் உண்டு.
அதில் போட்டியிட வேண்டுமென்பதே எங்களுடைய கருத்து, இது குறித்து எங்கள் தலைமையும், திமுக தலைமையும் கலந்தாலோசித்து முடிவு செய்யும் என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து, திமுக கூட்டணியில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் கூட்டணி கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றால் அது திமுகவின் வெற்றியாகவே கருதப்படும், இதனை மதிமுக விரும்பவில்லை என்பது இதிலிருந்து தெளிவாகிறது.

