TVK BJP: தமிழ் சினிமா நட்சத்திரம் மற்றும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தனது அரசியல் பயணத்தை எந்த வித கூட்டணியுடனும் இணைக்காமல் சுயமாக முன்னெடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுகிறார். அவர் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒரு அனுபவ மேடை என்று பார்க்கிறார். ஆனால் அவரது உண்மையான இலக்கு 2031 தேர்தல் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் கட்சியின் அடிப்படை அமைப்பை வலுப்படுத்தி, நீண்டகால அரசியல் நிலையை உருவாக்குவது விஜய்யின் நோக்கமாகும்.
முன்னதாக, விஜய் ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றியபோது, பல்வேறு கட்சிகள் அவரை தங்களது கூட்டணியில் இணைக்க முயன்றன. பாஜக உட்பட சில தேசியக் கட்சிகள், விஜய்யின் மக்கள் ஆதரவை அரசியல் பலமாக்க முயன்றது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், விஜய் தொடர்ந்து சுய அடையாளத்துடன் செயல்படுவோம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறார். இந்த சமீபத்திய நிலைப்பாடு, தமிழகத்தில் பாஜக தங்கள் செல்வாக்கை விரிவுப்படுத்தும் முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
டெல்லி தலைமையகம் விஜய்யின் முடிவால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும், சில பாஜக தலைவர்கள் அவரை மறுபரிசீலனை செய்ய அழுத்தம் கொடுப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இருப்பினும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. விஜய்யின் இந்த சுய நிலைப்பாடு, தமிழ்நாட்டின் அரசியல் சூழலில் புதிய திசையை உருவாக்கும் படியாக பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அவர் உருவாக்கும் புதிய அரசியல் எதிர்பார்ப்பு, மாநில அரசியலை மாற்றக்கூடிய சக்தியாக மாறுமா என்பதே கேள்வியாக உள்ளது.

