BJP TVK: தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்காக அரசியல் களம் புதிய வேகமெடுத்துள்ளது. இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக அறியப்பட்ட விஜய் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தவெக 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என அறிவித்த விஜய் அதற்காக முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார். 2 மாபெரும் மாநாடுகளையும், 5 தேர்தல் பிரச்சாரத்தையும் நடத்திய தவெக கரூர் சம்பவத்திலிருந்து பின்தங்கி இருந்தது. இந்நிலையில் தனது முதல் மாநாட்டிலேயே பாஜக கொள்கை எதிரி என்றும், திமுக அரசியல் எதிரி என்றும் விஜய் திட்ட வட்டமாக கூறியிருந்தார்.
தற்போது வரை அந்த நிலையிலிருந்த்து பின் வாங்காமல் உள்ளார். விஜய் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறியிருந்தாலும், பாஜக விஜய்யை எதிரியாக நினைக்கவில்லை. மாறாக அவருடன் கைகோர்க்கவே ஆசைப்பட்டது. தமிழகத்தில் பாஜகவிற்கு பெரிய செல்வாக்கு இல்லை. ஆனால் பாஜகவிற்கு தமிழகத்தில் காலூன்ற வேண்டுமென்ற ஆசையால், அதிமுக கூட்டணி அமைத்துவிட்டது. தமிழகத்தில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் அதற்கு அதிமுக மட்டும் போதாது என்று நினைத்த பாஜக விஜய்யுடனும் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் விஜய் கொள்கை எதிரியுடன் கூட்டணி இல்லையென்பதில் உறுதியாக இருந்தார்.
இதனால் இவ்வளவு நாட்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வந்த பாஜக தலைவர்கள் தற்போது விஜய்யை நேரடியாக விமர்சிக்க தொடங்கி விட்டனர். பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக ஒரு கட்சியே இல்லை என்ற நோக்கில் ஒரு கருத்தை கூறியிருந்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டியளித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விஜய் பற்றி தரக்குறைவான கருத்தை பேசியது மட்டுமல்லாமல், விஜய் பாஜக கூட்டணிக்கு நோ சொல்லியதால் அதன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேசிய அவர், திமுகவை கடுமையாக எதிர்த்த ராஜாஜி காங்கிரஸை வீழ்த்த வேண்டுமென்ற ஒற்றை நோக்கத்துடன் திமுக உடன் கூட்டணி அமைத்தார். ராஜாஜி போன்றவர்களே அவ்வாறு செய்யும் போது விஜய் போன்றவர்கள் திமுக எதிர்ப்பாளர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த கருத்து ராஜாஜியுடன் விஜய்யை ஒப்பிட்டு பேசி அவ்வளவு பெரிய தலைவர்களே கொள்கை எதிரியுடன் கூட்டணி அமைக்கும் போது, இப்போது வந்த விஜய்க்கும் கூட்டணி அமைப்பதில் என்ன சிரமம் என்ற தோணியில் அமைந்துள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். விஜய் குறித்த தமிழிசையின் கருத்து அனைத்து ஊடகங்களிலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

