அ.தி மு.க வின் முகமாக அறியப்பட்டு வந்த செங்கோட்டையன் செப்டம்பர்-5 ஆம் தேதி, செய்தியாளர் சந்திப்பில் “கட்சியில் இருந்து பிரிந்த முக்கிய தலைவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் இல்லையென்றால் அதற்கான பணிகளை என்னை போன்ற மனநிலையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்து மேற்கொள்வோம்” என்று கூறியிருந்தார்.
ஒருங்கிணைப்புக்காக அ.திமு.க பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் காலக்கெடு விதித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி பழனிசாமி கட்சி விவகாரங்களை பொது வெளியில் பேசியதற்காக முன்னால் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கினார். அவரோடு சேர்த்து அவருடைய ஆதரவாளர்களின் பதவியும் பறிக்கப்பட்டது.
கட்சியின் மத்திய செயலாளாராக இருப்பவர் தலைமை மீது கேள்வி எழுப்புவதா? என்று எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன் என்னுடைய கருத்தை கேட்காமல் என்னை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கிவிட்டனர். இது தர்மத்திற்கு புறம்பானது, இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டுமென்று என்று விமர்சித்திருந்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் “எனது ஒருங்கிணைப்பு பணி தொடரும்” என்றும் கூறி இருந்தார். இது தொடர்பாக செங்கோட்டையன் அவருடைய ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். செப்டம்பர் 9 யில் முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பில் அவர் ஓ.பன்னிர்செல்வம், சசிகலா, டி.டி.வி. தினகரன் மூவரையும் ஒரு அணியாக சேர்த்து செயல்படப்போகிறாரா, இல்லை தனி கட்சி தொடங்க போகிறாரா, இல்லை அ.ம.மு.க கட்சியில் இணைய போகிறாரா என்ற பல கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.